அரச ஊழியர்களின் சம்பள கழிவு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

0
Ivory Agency Sri Lanka

தொற்றுநோய் அச்சுறுத்தலையடுத்து பில்லியன் கணக்கான ரூபாய்களை சேகரித்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் இடுகம திட்டத்திற்கு, நிதி திரட்டுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் அனைத்து அரச ஊழியர்களுக்கும் பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு அமைய, நிதி கோரப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“குறித்த கடிதத்திற்கு அமைய, சம்பளத்தை அல்லது அதன் ஒரு பகுதியைக் கழிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக அரச ஊழியர்களுக்கு மறைமுகமாகவும் மற்றும் நேரடியாகவும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது.”

பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் கடந்த 11ஆம் திகதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் டி.டீ விமலசூரிய கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளரால் அரச ஊழியர்களின் மாத சம்பளத்தை கோரி அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னதாக எச்சரித்திருந்தது.

ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான, பி.பீ ஜயசுந்தர தன்னுடைய உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் ஊடாக, விடுத்த கோரிக்கையின் ஊடாக, முழு பொதுத்துறைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர் சங்கத்தின் செயலாளர், ஜோசப் ஸ்டார்லின் மே 7ஆம் திகதி எச்சரித்திருந்தார்.

இந்த கடிதம் அனுப்பப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், டி.டீ. விமலசூரிய பொது நிர்வாக அமைச்சர், அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், அரச ஊழியர்கள் எவ்வாறு நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

”உதாரணமாக, வட மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கு அமைய மே மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை கழித்துக்கொள்வதற்கு வட மாகாண கல்வி அமைச்சின் ஊழியர்களின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பூரணப்படுத்துவதற்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதோடு, அந்தப் படிவத்தை பூரணப்படுத்தி அனுப்பாத பாடசாலைகளுக்கு மே மாதத்திற்கான சம்பளத் தாளை அனுப்பாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.”

ஜனாதிபதி செயலகத்திற்கு நிதியளிக்காத மக்களுக்கு எதிர்காலத்தில் அநீதி ஏற்படும் அபாயத்தையும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

“மேலும், சம்பளத்தை அல்லது அதன் ஒரு பகுதியைக் கழிக்க விருப்பமுள்ள மற்றும் விருப்பமில்லாத ஊழியர்களின் பட்டியலைக் கோருவதும், சம்பளத்தைக் கழிக்கத் தயாராக இருக்கும் அனைத்து அதிகாரிகளின் பட்டியலையும் வைத்திருக்குமாறு அறிவுறுத்துவதும் இந்த விடயத்திற்கு விருப்பமில்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் பாராபட்சம் காட்டுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக அமையும்” எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது அரசியலமைப்பின் 12ஆவது பிரிவை மீறுவதாக அமையுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை ஊழியர்களின் ஒப்புதலுக்கு அமைய நன்கொடையாக வழங்குமாறு நிறுவனத் தலைவர்கள் மூலம் ஊழியர்களுக்கு அறிவிப்பது ஏற்கனவே ஒரு பிரச்சினையாக உள்ளதாகவும், நன்கொடை ஊழியர்களின் விருப்பப்படி நேரடியாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அரச ஊழியர்கள் வேறு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள, டி.டீ விமலசூரிய, 1996ஆம் ஆண்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் கே.பி ஏகொடவெலகே தலைமையிலான, கொரோனா சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஜுன் 12ஆம் திகதியன்று 140 கோடி ரூபாய் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

குறித்த நிதியத்திற்கு நிதியளிக்கும் விடயத்தில் பாதுகாப்புப் படையினருக்கு விளக்களிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments