இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக, பல்கலைக்கழக அதிகாரிகளால் ஒரு தசாப்த கால கற்பித்தல் நடவடிக்கைகளை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள, யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் தலைவருக்கு சார்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை, நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தடை விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியான ஒத்திவைக்கப்படுகின்ற நிலையில், பொறுமையிழந்த கலாநிதி குமரவடிவேல் குருபரன் ஜூலை 16ஆம் திகதி, தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.
“எனது வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படுமென்ற நமபிக்கையில், சுமார் எட்டு மாதங்களாக நான் காத்திருக்கிறேன், ஆனால் எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக இதுவரை விசாரணைகள் இடம்பெறவில்லை” என கலாநிதி குருபரன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக, நான் பொறுமை இழந்துவிட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதன் ஸ்தீரத்தன்மையைக் காண விரும்புகிறேன். அத்தகைய கடினமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நேரம் இது. எனவே, நான் இந்த இராஜினாமா கடிதத்தை அனுப்புகிறேன். ”
கடத்தப்பட்ட 24
இராணுவக் காவலில் இருந்தபோது காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரி, 1,250 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்டக்காரர்களின் உறவினர்கள், ”வடக்கில் இராணுவத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்பதை அவர் உணர்ந்துள்ளார்” எனக் கூறியுள்ளனர்.
24 வருடங்களுக்கு முன்பு இராணுவத்தால் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், யாழ்ப்பாண உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவரகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை சட்டத்தரணியான குருபரனின், சேவைகள் தொடர்பில் இராணுவத் தலைமையகத்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் விசாரணை செய்யபபட்டு மூன்று மாதங்களுக்குள், குருபரனுக்கு நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாவட்குலி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்த அப்போதைய லுத்தின் கேணல் கெப்பெட்டிவலனகேவின் கட்டளைக்கு அமைய, 1996 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி இடம்பெற்ற சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 24 பேரில் தமது மிகவும் நெருங்கிய உறவினர்கள் இருந்ததாக தெரிவித்து 2004ஆம் ஆண்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, மனுதாரர்கள் சார்பில் குமரவடிவேல் குமரகுருபரன் முன்னிலையாகியிருந்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு நிரந்தர விரிவுரையாளராக சேர்ந்த தம்மிடம் எவ்வித கலந்தாலோசனையும் செய்யாமல், நீதிமன்றில் முன்னிலையாவதை தடுக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தில் குருபரன் குறிப்பிட்டுள்ளார்.
“தடைக்கு முன்னர், என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. இயற்கை நீதி மற்றும் நியாயத்தை மறந்து, கோட்பாடுகளை மீறி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தான் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தான் தாக்கல் செய்துள்ள, அடிப்படை உரிமை மனு தொடர்பிலான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு சார்பாக கிடைக்கும் பட்சத்தில், தான் மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைய விரும்புவதாகவும் கலாநிதி குருபரன் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.