பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளும் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வு எக்னெலிகொடவின் மனைவியிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தனது கணவருக்கு நீதிக்கோரி, கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விருது வென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட, விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினம், தனக்கு ஆறுதலான நாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமற்போய் 3,873 நாட்களுக்குப் பின்னர், அவர் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கின் முதல் சாட்சியாக ஓகஸ்ட் 2ஆம் திகதி தான் சாட்சியம் அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிரகீத் இல்லாமல் போய் 3,873 நாட்களில் மிகவும் திருப்திகரமான நாளாக ஓகஸ்ட் 2 அமைந்தது. ஏனெனில் அவர் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை அரசு தாக்கல் செய்த வழக்கில் நான் முதல் சாட்சியாக அழைக்கப்பட்டேன். பழைய உண்மையில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.” என ட்விட்டர் தளத்தில் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, கடந்த பெ்ரவரி 20ஆம் திகதி அழைக்கப்பட்டபோதிலும் சில காரணங்களால் அவரால் சாட்சியமளிக்க முடியவில்லை இந்நிலையில் சாட்சியப் பதிவு செப்டெம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எக்னெலிகொட வழக்கில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 உறுப்பினர்களுக்கு எதிராக கொலை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் கேணல் எரந்த பீரிஸ், ஆர். எம். டி கே. ராஜபக்ச, சுரேஷ் என அழைக்கப்படும் வடுகெதர வினி பிரியந்த டிலன்ஜன் உபசேன, ரஞ்சி என அழைக்கப்படும் சமிந்த குமார அபேரத்ன, தனுஷ்க குணரத்ன, ஐயாசாமி பாலசுப்ரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் டி ஈ ஆர் பீரிஸ் லெப்டினன்ட் கேர்ணல் ஷம்மி அர்ஜூன குமாரரத்ன ஆகியோருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
செப்டெம்பர் 7ஆம் திகதி தான் மீண்டும் சாட்சியமளிக்க உள்ளதாகவும் சந்தியா எக்னலிகொட தெரிவிக்கின்றார்.
ஒரு தசாப்த போராட்டம்
ஜனவரி 24, 2010 அன்று கொழும்பிற்கு அருகே கடத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமைத் தொடர்பில் சந்தியா எக்னலிகொட ஜனவரி 25, 2010 அன்று ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரின் பி அறிக்கை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதோடு, கடந்த 2015ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்டது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2019 ஜனவரி 24ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வின் ஊடாக இந்த வழக்கை விசாரணை செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்தார்.
வழக்கை மூடிமறைக்க முயற்சி
கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தெற்கின் பிரபலமான வழக்குகளை, நீதிமன்ற அதிகாரம் இல்லாத, ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிவிக்கும் மனித உரிமைகள் அமைப்பு, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு கோரி நீதியமைச்சர் அலி சப்ரிக்கும், சட்டமா அதிபருக்கும் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்கள், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு செல்வதாக மகஜரை கையளித்த மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட, ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“பல வருடங்களாக நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும்? எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்துவது யார்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது யார்? தயவுசெய்து குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம். குற்றவாளிகளை தண்டியுங்கள். அது உங்கள் பொறுப்பு என்பதை நான் உங்களுக்கு தெளிவாக நினைவுபடுத்துகிறேன், தயவுசெய்து அந்த பொறுப்பிற்காக முன்நிற்குமாறு கேட்கின்றேன்” என சந்தியா ஏக்னெலிகொட சட்டமா அதிபரிடமும் நீதி அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.