கல்வியை அரசியல் மயமாக்குவதாக அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

0
Ivory Agency Sri Lanka

அண்மையில் ஜனாதிபதியுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் போது கல்வி முறையை அரசியல் மயப்படுத்துவதற்கு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டுகிறது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கூற்றுப்படி, ஆசிரியர் இடமாற்றம் மாணவர்களை பாடசாலைக்கு உள்ளர்த்தல் ஆகிய விடயங்களைத் தவிர பாடசாலை அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் அரசியல்வாதிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பொதுவான குறிக்கோள் எனவும் இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லையெனவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக செப்டெம்பர் 10ஆம் திகதி ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இது தவிர்க்க முடியாத அரசியல் தலையீடு எனவும் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பதில் அதிபர்களை நியமிப்பது குறித்தும், பாடசாலைகளில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காகவும் இந்தக் கூட்டம் இடம்பெற்றதாக அந்த ஊடக அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடசாலைகளில் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்ப பதில் அதிபர்களை நியமிப்பது சட்டவிரோத செயல் எனக் கூறியுள்ளது.

“ஒக்டோபர் 22, 2014 திகதியிடப்பட்ட இலங்கை அதிபர்களின் சேவை யாப்பின் எண் 1885/31 இன் படி போட்டிப் பரீட்சையை நடத்தி பாசடாலைகளின் அதிபர்களை நியமிக்க வேண்டும். இந்த சேவை யாப்பின் கற்பித்தல் சேவையில் அனுபவம் வாய்ந்த கற்பித்தல் சேவையில் திறமையான அதிகாரிகள் மாத்திரமே போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியும். அதிபர்களின் சேவையில் நுழைவதற்கான வாய்ப்பு மேற்கண்ட சேவை யாப்பின் ஊடாக வழங்கப்படுகிறது. ஆனால், பாடசாலைகளின் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்ப பதில் அதிபர்களை நியமிப்பதானது, அதிபர் சேவைக்கு தகுதிபெற்ற ஆசிரியர்களை, அதிபர் சேவைக்குள் உள்வாங்கும் வாய்ப்பு இல்லாமல் போகும்”

கல்விச் சேவை விதிமுறைகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீறும் வகையில் முன்னைய அரசாங்கத்தால் நியமனங்கள் செய்யப்பட்டதாகவும், கல்விச் சேவைகளில் உள்ள அனைத்து தரப்பினரும் கூட்டாக இதுபோன்ற நியமனங்களை நீதித்துறை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நிறுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

போட்டிப் பரீட்சைகள் மூலம் அதிபர்களின் சேவையில் நுழைவதற்கு இயலாத பலர், அரசியல்வாதிகளின் அனுசரணையில், பின்கதவால் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படுவதை எதிர்த்து இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதோடு, பதில் அதிபர்களை நியமிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் சட்ட ரீதியிலான ஒரு ஆட்சி இடம்பெறுவதாக தெரிவித்துக்கொண்டு, சேவை விதிமுறைகளை மீறும் வகையில் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு பதில் அதிபர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தால், அது சட்ட ரீதியான ஒரு நிர்வாகத்தை நிறுவுவது தொடர்பாக ஒரு முரண்பாட்டை உருவாக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“பாடசாலைகள் என்பது சுயாதீனமாக இயங்க வேண்டிய நிறுவனங்கள். அரசியல்வாதிகளை அதில் தலையிட அனுமதிப்பது அமைப்பினை மேலும் அரசியல்மயமாக்கலாகும். அரசியல்வாதிகளை அனுமதிப்பது பொதுவான நன்மைக்காகவே தவிர அரசியல் தலையீட்டிற்காக அல்ல என கூறப்பட்டாலும், அது அரசியல் தலையீடாக இருப்பது தவிர்க்க முடியாதது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.”

தற்போதுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 372இலிருந்து ஆயிரமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளாகவும் எனினும், நாட்டில் காணப்படும் 10,174 பாடசாலைகளில் ஆயிரத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்யப்படுகையில், ஏனைய சிறிய பாடசாலைகள் தொடர்பிலான அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“தேசிய பாடசாலைகள் இருப்பதன் மூலம் மாத்திரமே பாடசாலை முறையை உருவாக்க முடியும் என்ற கருத்தை இது குறிக்கிறது. அனைத்து பாடசாலைகளுக்கும் சமமான வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுமென ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை மாத்திரமே அபிவிருத்தி செய்வதால் அந்த இலக்கை அடைய முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.”

இந்த சூழலில், இலங்கை ஆசிரியர் சங்கம் பாசடசாலைகளின் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பதில் அதிபர்களை நியமிக்க வேண்டாம் எனவும், அதிபர்களின் சேவை போட்டிப் பரீட்சையை நடத்துவதன் மூலம் சேவை யாப்பிற்கு ஏற்ப அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனலும் கேட்டுக்கொள்கிறது, இதனால் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அதிபர் சேவையில் நுழைய முடியும்.

கல்வி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது கல்வித்துறையில் கல்வியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Facebook Comments