கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளின் விசேட விழாக்கள் நிறுத்தப்பட்ட அதேநாளில் ஜனாதிபதி மாணவர்களின் பங்களிப்புடன் மர நடுகையில் ஈடுபட்ட விடயம் அம்பலமாகியுள்ளது.
விவசாய மற்றும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மர நடுகை திட்டத்தை நாட்டின் முன்னணி வைத்தியர்கள் சங்கம் “கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க இது உதவுகிறது” என பாராட்டியுள்ளது.
“கெகுலு துரு உதானய” சிறுவர் மர நடுகை தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கடந்த 15ஆம் திகதி முற்பகல் கம்பளை அட்டபாகை விமலதர்ம தேசிய பாடசாலை வளாகத்தில் ஆரம்பமானது.
எவ்வாறெனினும் அதே தினத்தில், பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாகாண, வலய கல்வி அதிகாரிகள், பிரிவினாக்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளையும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த 12ஆம் திகதி, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கண்டியில் அமைந்துள்ள கெகங்கல மகா வித்தியாலயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கொள்கைகளை மீறி பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் ஒரு விழாவை நடத்தியிருந்தார்.
குறித்த பாடசாலையின் நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்ததாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் இதுத் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தது.
ஜனாதிபதியும் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் சிறுவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, ‘கெகுலு துரு உதானய’ திட்டத்தைத் ஆரம்பித்து வைத்தனர். ஜனாதிபதி சிறுவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.
அவரது வாய்வழி அறிக்கைகள் சுற்றறிக்கைகளாக கருதப்பட வேண்டும் என ஜனாதிபதி முன்னர் கூறியிருந்தார். கல்வி அமைச்சின் செயலாளரின் உத்தரவை இரத்து செய்யும் வாய்வழி அல்லது சுற்றறிக்கையை ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் எதுவும் வெளியாகத நிலையில், இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
”கெகுலு துரு உதானய’ திட்டம் ஆண்டுதோறும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். சிறுவர்களின் மேற்பார்வையில் 5 ஆண்டுகளுக்குள் மா, பலா, ஈரப்பலா, தென்னை உள்ளிட்ட 17 லட்சம் மரக்கன்றுகளை சூழலுக்கு வழங்குவது அரசாங்கத்தின் இலக்காகும்.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்றிட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் அரச மர நடுகை திட்டத்தைப் பாராட்டும் வகையில் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க இந்த திட்டம் உதவும் எனத் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில், அரச விழாக்களுக்கு பாடசாலை மாணவர்களை பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.