மகாவலி கரையை சேதப்படுத்தி ஆற்றின் திசையை மாற்ற அனுமதித்தது யார்?

0
Ivory Agency Sri Lanka

சுற்றாடல் அமைச்சரின் அழுத்தத்தின் கீழ் மகாவலி ஆற்றை திசை திருப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

“தேசிய சுற்றாடல் சட்டத்தை மீறி தனது நட்பு நாடுகளுக்கு மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறார்.”

மகாவலி ஆற்றின் சாபி நகர் பகுதியில் 27 ஹெக்டேயர் நிலம் இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழ்விற்காக சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாவலி ஆற்றின் சாபி நகர் பகுதியில் இயந்திரங்களைப் பயன்படுத்தி பெருமளவிலான மணல் அகழ்வுகளை மேற்கொள்ள அஹங்கம நிர்மாண நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இயற்கை கற்கை நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பாரிய அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கினால், அது சுற்றுச்சூழல் மதிப்பீட்டை நடத்த வேண்டுமெனவும், சுற்றுச்சூழல் அமைப்பின் உணர்திறனை ஆய்வு செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் பெரிய அளவிலான மணல் அகழ்வு அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது என சூழலியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, பிரதேசவாசிகளால் சிறிய அளவிலான மணல் அகழ்வுக்கு அனுமதி கோரிய சந்தர்பத்தில், கூடைகள் மூலம் மணல் அள்ளப்படுவது இயற்கைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் காரணம்கூறி, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அனுமதி மறுத்திருந்த விடயத்தை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

”விசல்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் மணல் அகழ்விற்கான அனுமதியை கோரியது. ஆனால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் உணர்திறன் காரணமாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.”

அங்கீகரிக்கப்படாத பெரிய அளவிலான இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சாபி நகர் பகுதியானது, மகாவலி ஆறின் ஊடாக இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட நீர்க்குளங்கள், மணல் படிவுகள் மற்றும் இயற்கையான சூழலியல் வலயத்தைக் கொண்ட பிரதேசம் என சுற்றாடல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

2021/57/B இலக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட திருகோணமலைப் பகுதியில் 2021 மணல் அகழ்வு தொடர்பான அறிக்கைக்கு அமைய, ஏற்கனவே பெருமளவிலான மணல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரை மிகவும் சேதமடைந்துள்ளதாக கூறும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம், இப்பகுதியில் உப்புத்தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Facebook Comments