பொலிஸாரின் சித்திரவதைகளினால் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படும் நபர்கள், எந்தவொரு சமூக அந்தஸ்தை கொண்டிருந்தாலும், எந்தவொரு குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டாலும், அவர்களின்
உயிர் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் பிற உரிமைகள் மீறப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்யும் பொறுப்பு பொலிஸ்மா அதிபருக்கு காணப்படுவதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை முழுமையாக உறுதிப்படுத்துகின்றன.”
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா, பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொலிஸுக்குள் ஏற்படும் மரணங்கள் குறித்து நீண்ட வரலாறு இருந்தாலும், அது இப்போது ஒரு போக்காக மாறியுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
தாரக தர்மகீர்த்தி விஜசேகர மற்றும் தினெத் மெலன் மாம்புலா ஆகியோர் ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்பத்திலும், சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேரின் உயிரிழப்பு குறித்து, பொலிஸார் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2021.05.07 அன்று மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதான டி.சுனில் இந்திரஜித் மரணம் தொடர்பாக வெலிகம பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2021.06.03 அன்று 22 வயது சந்திரன் விதுஷனின் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2021.06.06 அன்று இரு பிள்ளைகளின் தந்தையான 48 வயது மொஹட் அலிகான் மரணம் தொடர்பாக பாணந்துறை வடக்கு பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது இலங்கை பொலிஸின் தலைவராக, பொலிஸ்மா அதிபரின் சட்டபூர்வமான கடமை என்பதை சட்டத்தரணி சேனக பெரேர சி.டி விக்ரமரத்னவுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.
“பொலிஸார் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடர்ந்து குறைந்து வரும் பட்சத்தில், சமூகத்தில் பிரஜைகள், தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ளும் தவிர்க்க முடியாத சூழ்நிலையை தோற்றுவிக்கும்”
இதுபோன்ற மரணங்கள் நிகழும்போது, இடைநீக்கத்திற்கு அப்பால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும், இதனாலேயே இதுபோன்ற சித்திரவதைகளை மேற்கொள்வதற்கு, பொலிஸாருக்கு கூடுதல் தைரியம் கிடைப்பதாகவும் சட்டத்தரணி சேனக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
“அதன்படி, இந்த நாட்டில் பொலிஸ் கைதிகளின் உரிமைகளுக்கான ஒரு பொறுப்பான அமைப்பாக, பொலிஸ் தொடரும் சித்திரவதை அலைகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்” என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டின், பிரதி சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை தொடர்பான ஐ.நா விசேட பிரதிநிதிதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்பதை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலசூரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் ஒக்டோபர் வரையில், பொலிஸ் கைதுகளில் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.