கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் “நோயாளி பராமரிப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம்”

0
Ivory Agency Sri Lanka

விசேட வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றப் பட்டியல்களைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக நாட்டின் முன்னணி சுகாதார சங்கம் எச்சரித்துள்ளதோடு, இதனால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளில் வீழ்ச்சி ஏற்படுமென, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் ஒரு தொற்றுநோய் பரவி வருகின்ற நிலையில், விசேட வைத்திய சேவையை நாடு முழுவதும் சமமாக பராமரிக்க வேண்டுமெனின், வருடாந்த இடமாற்றங்கள் துல்லியமாகவும், வழக்கமான நடைமுறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஊடக அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது

“இந்த குறிப்பிட்ட காலக்கெடு ஸ்தாபனக் குறியீட்டில்சரியாக நன்கு விபரிக்கப்பட்டுள்ளது.”

ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 15ற்கு முன்னதாக விசேட வைத்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென, நேற்றைய தினம் (16) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனல் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடமாற்றப் பட்டியல் வருடத்தின் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் வெளியிடப்பட வேண்டும், மேலும் மேன்முறையீடுகள் ஒக்டோபர் 15ற்குள் செய்யப்பட வேண்டும்.

அதன்பின்னர், மேன்முறையீட்டுக் குழுவின் இறுதி முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த வருடத்தின் நவம்பர் முதலாம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்.

புதிய ஆண்டின் ஜனவரி முதலாம் திகதிக்குள் வைத்திய நிபுணர்கள் புதிய பணியிடங்களுக்கு நியமனங்கள் பெறுவதற்கான வாய்ப்பை இது உறுதி செய்யும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது பல்வேறு நிர்வாக சிக்கல்களைத் தடுக்கும் எனவும், விசேட வைத்தியர்களின் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் போன்ற விடயங்களையும் இது இலகுவாக்கும் எனவும், வைத்தியர் செனல் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வர வேண்டிய விசேட வைத்தியர் இடமாற்றங்களை அமுல்படுத்துவதில் சுகாதார அமைச்சும் தமது பொறுப்பை தவறவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற வகையில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் தயவான மற்றும் உடனடி கவனம் திரும்புமென என நாங்கள் நம்புகிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் வைத்திய சேவையின், விசேட வைத்திய சேவையை வழங்க முடியாத நிலை ஏற்படுவதோடு, நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளை சீர்குலையும் எனவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் யுத்த காலத்தில்கூட, உயர் தரத்தையும், சமத்துவத்தையும் பேணும் வகையில், நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் விசேட வைத்திய அதிகாரிகளை நியமித்தன் ஊடாக, இலங்கையின் சுகாதார சேவை, உலகின் பிற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்ததாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆதரவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறு தெரிவிக்கையில், யுத்தத்தின்போது வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அந்த சங்கம் எவ்வித தலையீட்டையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி நாட்களில் வன்னி பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தான் உள்ளிட்ட நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தில் தலையிடவில்லை எனவும், யுத்த வலயத்தில் பணியாற்றிய சிரேஷ்ட அரச வைத்தியர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட போதிலும், அந்த பகுதியில் பணியாற்றிய அவர் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான வைத்தியர்களையேனும் பாதுகாக்கும் பொறுப்பை வைத்திய அதிகாரிகள் சங்கம் புறக்கணித்திருந்ததாக, முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் சுகாதார பணிப்பாளர் துரைராஜா வரதராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments