இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான குடிமக்களாக தாம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனக் கோரி தலைமன்னாரிலிருந்து மாத்தளைக்கு மலையகத் தமிழர்கள் பேரணியாகச் சென்று ஒருவாரம் கூட ஆகாத நிலையில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட நிர்வாகம் அடித்து நொறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாத்தளை எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட, ரத்வத்தை கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழ்ந்து வரும் தோட்ட தொழிலாளி ஒருவரால் கட்டப்பட்ட தற்காலிக வீடு உதவி தோட்ட முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் ஒரே லயன் குடியிப்பில் நீண்ட நாட்களாக வசித்து வரும் நிலையில், போதிய இடவசதி இல்லாததால் புதிய வீடு ஒன்றை அமைப்பதற்கு 2005ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் தோட்ட நிர்வாகத்திடம் காணியை கோரியுள்ளனர்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தோட்ட நிர்வாகம் கடந்த வருடம் இவர்களுக்கு காணி ஒன்றை வழங்கியதுடன் கடந்த வாரம் தோட்ட தொழிலாளி அந்த காணியில் தற்காலிக வீடொன்றை நிர்மாணித்துள்ளார்.
ரத்வத்தை தோட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உதவி தோட்ட முகாமையாளர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி தற்காலிக வீட்டை சேதப்படுத்தியதோடு, வீட்டில் இருந்து பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் பிரதேச மக்களால் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காகவும், நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவதற்காகவும் மாத்தளைக்கு நேற்று சென்றிருந்தார்.
அமைச்சரின் விஜயத்தை அடுத்து தோட்ட உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும், சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை பணி நீக்கம் செய்வதற்கும் இணங்கியுள்ள தோட்ட நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பில் தோட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் மக்கள் பிரதிநிதியாக கருதப்படும் அமைச்சர், ஒரு தொழிலாளியின் சொத்துக்களை அழித்தது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை, மலையக மக்களின் 200 வருடகால வரலாற்று நூல் அறிமுக நிகழ்வு நேற்று (20) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிலையில் அதில் பங்கேற்றிருந்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டதோடு, எவரேனும் தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்குமாறு மலையகத் தமிழ் மக்களை அவர் வலியுறுத்தினார்.
“ நேற்று (19) காலையில் மாத்தளை மாவட்டத்தில் ரத்வத்த என்ற தோட்டத்தில் கீழ் பிரிவில் ஒரு அராஜகம் நடந்துள்ளது தோட்டத்தில் நிற்கக்கூடிய உதவி முகாமையாளர் வீடொன்றை இடித்துள்ளார். மலைய மக்களுக்கு நான் சொல்கின்றேன். உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள். உங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தற்பாதுகாப்புக்காக நீங்கள் திருப்பி அடிப்பதற்கு உரிமை உண்டு. இனிமேல் நாங்கள் பொறுக்கமாட்டோம் என்று கூறிவைக்க விரும்புகின்றோம்.”
இலங்கையின் அர்த்தமுள்ள குடிமக்களாக தம்மை ஏற்குமாறு 11 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து ஜுலை 28ஆம் திகதி ஆரம்ப நிகழ்வினை நடத்திய மலையகத் தமிழ் மக்கள், ஜுலை 29 முதல் சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து மாத்தளையை அடைந்து ஓகஸ்ட் 12ஆம் திகதி இறுதி விழாவை நடத்தினர்.
இலங்கையில் மிகப் பெரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்கள் மன்னார் மற்றும் மாத்தளை ஆகும்.
மலையகத் தமிழர்களின் வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல். ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகாரம். தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச் சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை செயற்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை. வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, சட்டப்பாதுகாப்பு, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம். தொழிலாளர்களிலிருந்து சிறு நில உடமையாளர்களாக மாறும் பொருட்டு வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை. மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிக்கு சம பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து. அரசாங்க சேவைககளையும், சமூக நலத்திட்டங்களையும் சமமான அணுகல்.
பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல். வீட்டுப் பணியாளர்களின் ழுதுமையான பாதுகாப்பு. மலையகக் கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல்.
அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு, ஆகியவை இலங்கையின் அர்த்தமுள்ள குடிமக்களாக மாறுவதற்கான மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளாகும்.