பஸ்துன்றட்ட தேசிய கல்வியியல் கல்லூரியை வைத்திய பீடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு

0
Ivory Agency Sri Lanka

ஆங்கில ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்லூரியை வைத்திய பீடமாக மாற்றும் திட்டத்திற்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

பஸ்துன்றட்ட தேசிய கல்வியியல் கல்லூரியை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வைத்தி பீடமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

பாடசாலை கட்டமைப்பிற்கு அமையஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் கல்லூரியை, வைத்திய பீடமாக மாற்றுவது ”குடிசையை உடைத்து நாற்காலியை உருவாக்குவது” போன்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

மேரி மியூசியஸ் நன்கொடை அளித்த 42 ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்ட பஸ்துன்றட்ட தேசிய கல்வியியல் கல்லூரி, முன்னர் களுத்துறை ஆங்கில ஆசிரியர் கல்லூரி என்று அழைக்கப்பட்டது.

மேலும் 1985ஆம் ஆண்டில் இது தேசிய கல்வியியல் கல்லூரியாக மாற்றப்பட்டதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நெரஞ்சன் குணவர்தன, களுத்துறை உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் அடங்கிய குழு இந்த நோக்கத்திற்காக கல்லூரியில் ஆய்வு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக சிரேஷ்ட தொழிற்சங்கவாதி குறிப்பிட்டுள்ளார்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு வைத்திய பீடத்தை அமைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ஆசிரியர் சங்க செயலாளர், மற்றொரு வைத்திய பீடத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஆசிரியர்களை உருவாக்கும் கல்லூரியை மூடிவிட்டு வைத்திய பீடத்தை உருவாக்குவது நகைப்புக்குரியது என ஜோசப் ஸ்டாலின் தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் கருத்தில் இருந்து தான் இந்த பணிஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

“அரசியல்வாதிகள் தமது புகழுக்காக கல்வி தொடர்பில் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வது துரதிர்ஷ்டவசமானது.”

கல்விக்கு பொறுப்பான அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் இருக்கின்ற நிலையில், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன போன்ற அமைச்சர் ஒருவர் தனது எல்லைக்குள் வராத ஒரு விடயத்திற்காக, பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லூரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதானது, ‘சௌபாக்கிய நோக்கு’ கொள்கையா என ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாடசாலை கட்டமைப்பில் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய கல்வியியல் கல்லூரிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டிய நிலையில், வைத்திய பீடம் என்ற போர்வையில் தற்போதுள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரியை மூடுவது பாடசாலை முறைமைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமென இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பஸ்துன்றட்ட தேசிய கல்வியியல் கல்லூரியை வைத்திய பீடமாக மாற்றும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென, ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பஸ்துன்றட்ட தேசிய கல்வியியல் கல்லூரியில் கற்பவர்களும், இதற்கு முன்னர் இந்த கல்லூரியில் கல்வி கற்றவர்களும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் 20 தேசிய கல்வியியல் கல்லூரிகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டு, அங்கு கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்த கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Facebook Comments