அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் `உயிருக்கான உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு` ஆகியவற்றைப் புறந்தள்ளும் வகையில் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்த 31 பேர் புதன்கிழமை (30 மார்ச்) இரவு டூசல்டார்ஃப் விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
உள்ளூர் நேரம் இரவு 09:16 மணிக்கு ஸ்பானிஷ் விமான நிறுவமனான-வேமோஸ் ஏர் பிளைட் PLM/ EB 308 விமானத்தில் இவர்கள் வலிந்து நாடு கடத்தப்பட்டனர். இதை ஜே டி எஸ் அமைப்பு தனது டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. (JDSLanka) இந்த விமானம் இன்று- புதன்கிழமை காலை 10.21 மணிக்கு கொழும்பை வந்தடைந்தது.
எனினும் கடைசி நிமிடத்தில் 4 பேர் விடுவிக்கப்பட்டு அவர்கள் ரயில் வண்டியில் தமது வீடுகளுக்குத் திரும்பினர்.
முன்னதாக அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வலிந்த நாடு கடத்தலுக்கு எதிராகவும் குழுமி போராட்டங்களை முன்னெடுத்தனர். நாட் கடத்தப்படும் அவர்களின் உயிர்களுக்கு ஜெர்மன் அரசு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
`எந்த மனிதரும் சட்ட விரோதமானவர் அல்ல, நாடு கடத்தப்படுவதை ஒழித்துக் கட்டுங்கள், அகதித் தஞ்சம் கோருவது குற்றமில்லை` என்று டூசல்டர்ஃப் விமான நிலையத்தில் குழுமியிருந்த பன்னாட்டு போராட்டக்கார ரகள் குரல் கொடுத்தனர்.
எனினும் ஃபிரான்க்பர்ட் மற்றும் ஸ்டுட்கர்ட் நகரில் தடுத்து வைக்கப்பட்ட இதர தமிழர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஜெர்மனியில் சுற்றி வளைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவதற்கு முதல் படியாகத் தடுப்பு நிலையங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற வேண்டும் எனும் தீர்மானத்திற்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்த ஒரு சில நாட்களிலேயே வலிந்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை நாடு கடத்தும் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
ஜெர்மனியில் நிலைப்பாடு மேற்குலகின் `இரட்டை நிலைப்பாட்டை` காட்டுகிறது என்றும் மனித உரிமை அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மனி சர்ச்சைக்குரிய வகையில் குடியேற்றம் தொடர்பான சட்டமொன்றை இயற்றியது. அந்தச் சட்டம் ஜெர்மனியின் அகதி தஞ்சக் கொள்கை மற்றும் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. மேலும் அகதித் தஞ்சம் கோரப்பட்டு அது நிராகரிக்கப்பட்டோரை நாடு கடத்தவும் அந்தச் சட்டம் வழி செய்கிறது.
அதேவேளை ஜெர்மனியின் அரசியல் சாசனம் பிரிவு ஒன்றின் கீழிலுள்ள `அடிப்படை உரிமைகள்` கீழ்க்கண்டவற்றை தெளிவாக வரையறுக்கிறது.
1. மனித வாழ்வும் கண்ணியம் மீற முடியாததாகும். அதை மதித்து பாதுகாக்க வேண்டியது அரசின் அனைத்து அதிகார மட்டத்தின் கடமையாகும்.
2. எனவே ஜெர்மன் மக்கள் மீற முடியாததும் மாற்ற முடியாததுமான மனித உரிமைகள் அனைத்து சமூகம், உலகில் சமாதானம் மற்றும் நீதியின் அடிப்படையாகும்.
அகதித் தஞ்சம் கோரி அது நிராகரிக்கப்பட்டவர்களை வலிந்து நாடு கடத்த வேண்டாம் என்று இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும், சிவில் சமூகங்களும் ஜெர்மனிக்கு உருக்கமான கோரிக்கையை விடுத்திருந்தனர்.