சிறையில் உள்ள கவிஞருக்கு பாதுகாப்புக் கோரும் ஊடகவியலாளர்கள்

0
Ivory Agency Sri Lanka

கவிதை புத்தகத்தை வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டு பத்து மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் முஸ்லீம் கவிஞரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஊடக அமைப்பு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அஹ்னாப் ஜஸீமை எலி கடித்துதுள்ளதாக, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின், விசாரணை மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள, மார்ச் 29 திகதியிடப்பட்ட கடிதத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அளித்த அறிக்கைக்கு அமைய, அஹ்னாப் ஜசீம் என்ற எழுத்தாளர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் 2020 மே 16ஆம் திகதி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தான் எழுதிய கவிதைகளை உள்ளடக்கி நவரசம் எனும் பெயரில் இரு புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புத்தகத்தின் பிரதி ‘சேவ் த பேர்ள்’ எனும் அமைப்புடன் தொடர்புடைய இடமொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட நிலையிலேயே அப்புத்தகத்தின் ஆசிரியரான அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு அளித்த அறிக்கைக்கு அமைய, 152, 04 குறுக்கு வீதி, அல் மனார், கல்பிட்டி, புத்தளத்தில் வசிக்கும் சாஹுல் ஹமீட் சுல்தான் என்ற நபர், சேவ் த பேர்ள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறப்படுகிறது.

மேலும், அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் 2020 மே 3ஆம் கைது செய்யப்பட்டும்போது அவரிடம் ”நவரசம்” புத்தகத்தின் பிரதி காணப்பட்டதா குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதனையடுத்து, மதுரங்குளியில் அமைந்துள்ள “சேவ் த பேர்ள்“ அமைப்பின் மற்றொரு கட்டிடத்தில் குற்றப்புலனாய்வு பிரிவு தேடுதல் மேற்கொண்டபோது, நவரசம் புத்தகத்தின் 19 பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மதுரங்குளி கட்டிடத்தை அண்மித்து அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கற்பித்த வண்ணம் அனாப் ஜசீம் (மொஹமட் ஜாசிம் மொஹமட் அஹ்னாப்) இந்த கவிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2020 மே 16ஆம் திகதி மன்னார், சிலாவத்துறை, பண்டாரவேலியில் அமைந்துள்ள 57/2 என்ற இலக்கமுடைய அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து கிடைக்கவில்லை எனவும், இளைஞர்கள் வசிக்கும் ஒரு கிராமத்தில் இருந்தே கிடைத்ததாகவும், குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

புத்தகத்தை வைத்திருந்தவர்கள், புத்தகத்தை கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அந்த அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தமிழ் கவிதை புத்தகத்தில் தீவிரவாதக் கருத்துக்களை உள்ளடங்கியுள்ளதால், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நியாயப்படுத்தினாலும், அதில் உண்மையில் தீவிரவாதத்திற்கு எதிரான கவிதைகள் காணப்படுவதாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“அந்த புத்தகத்தில் உள்ள கவிதைகளையும், அவர் எழுதிய பிற கவிதைகளையும் வாசித்தபோது, அவர் போருக்கு எதிராகவும் அமைதிக்காகவும் பல ஐ.எஸ் எதிர்ப்பு கவிதைகளை எழுதியிருப்பதைக் கண்டோம். தீவிரவாதத்திற்கு எதிரான அவரது கவிதைகள் சிறப்பானவை”

புத்தகத்தில் உள்ள கவிதைகள் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றதா என்பது குறித்து சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர்களிடமிருந்து ஒரு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மரணத்திற்குப் பின்னரான வாழ்க்கை பற்றிய கவிதைகளும் இதில் உள்ளடங்கியுள்ளதோடு, மேலும் அவை சிறுவர்களிக் மனதிற்கு தீங்கு விளைவிக்கும் என பலர் பரிந்துரைத்துள்ளதாகவும், அந்த அமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது.


பௌத்தத்திலும் இதே நிலைதான்

பௌத்த இலக்கியங்களில், குறிப்பாக மரணத்திற்குப் பின்னரான வாழ்க்கை தொடர்பில் அறநெறி மற்றும் பாடசாலை புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, எனினும், தமிழில் எழுதப்பட்ட அத்தகைய புத்தகத்தின் ஆசிரியரை கைது செய்து தடுத்து வைத்திருப்பது ஒரு கடுமையான பிரச்சினை என வலியுறுத்தியுள்ளது.

குறித்த இளைஞரை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நவரசம் புத்தகத்தில் தீவிரவாத கருத்துகள் காணப்பட்டதாக கூறி இளம் கவிஞர் அஹ்னாப் ஜசீம் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கும் இளம் ஊடகவியலாளர் சங்கம் எனினும் தற்போது அவர் தொடர்பில் மற்றொரு விசாரணை இடம்பெற்று வருவதாகவும், நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதன் உண்மைத்தன்மையை விரைவாக அறிந்துகொள்ளவும், இந்த இளைஞன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகாமல் தடுக்கவும், அவரது உயிரை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு இளம் ஊடகவியலாளர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

”இத்தகைய கலை, இலக்கிய தீவிரவாத எதிர்ப்பு இளைஞர்களை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்திருப்பது தீவிரவாதத்திற்கு இயல்பான தூண்டுதலாக அமையும்”

இலங்கையின் அரசியலமைப்பின் படி, கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு எனவும், ‘நவரசம்’ புத்தகத்தின் ஆசிரியருக்கும் இது பொருந்தும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“ஒரு இலக்கிய படைப்பை எழுதியதற்காக அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.”

இளம் கவிஞர் அஹ்னாப் ஜசீம் 2020 மே முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், இந்த விடயத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, ஊடகவியலாளர்கள் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளது.

கடிதத்தின் நகல்கள் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனைத்து ஆணையாளர்கள், பொலிஸ்மா அதிபர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், சட்டமா அதிபர், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Facebook Comments