அஹ்னாஃப் விடுதலை வலியுறுத்தும் ஐரோப்பிய அரசாங்கங்கள்

0
Ivory Agency Sri Lanka

ஒரு வருடத்திற்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப் ஜஸீமை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐரோப்பிய நாடுகளின் ஒரு குழு, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

பயங்கரவாத தடடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் ஆசிரியரான அஹ்னாஃப் ஜஸீம் விடுதலை செய்யப்பட வேண்டுமென, கடந்த மாதம் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் ஒன்பது நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

”ஜஸீமை உடனடியாக விடுவிக்க வேண்டும், அல்லது ஒரு விரைவான விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கும், சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு அமைய குற்றச்சாட்டுகளை விரைவாக தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் பல மனித உரிமை அமைப்புகளின் வரிசையில் நாங்கள் இணைகின்றோம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றமற்ற அல்லது வழக்குத் தொடராமல் அப்பாவி மக்களை 18 மாதங்கள் வரை தன்னிச்சையாக தடுத்து வைக்க அனுமதிக்கும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அஹ்னாஃப் ஜசீம்கைது செய்யப்பட்டுள்ளார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மேலும் தாமதமின்றி மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கான அரசின் உறுதிப்பாட்டுடன் முழுமையாக இணங்க வேண்டும்.” என பிரித்தானியா, எஸ்தோனியா, ஸ்பெயின், ஜேர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின், மனித உரிமை தூதுவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஹ்னாப் ஜஸீமின் விடுதலையை ஆதரித்து கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மனித உரிமைகள் குழு, இலங்கையின் இன மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், தமிழர்களும் முஸ்லிம்களும் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பென் சர்வதேச அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை அமைப்பு, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கை செயல் அமைப்பு, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மையம், சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிரான சர்வதேச அமைப்ப, பேர்ள் எக்சன் மற்றும் ப்ரிமியுஸ் ஆகிய அமைப்புகள் அதில் கையெழுத்திட்டிருந்தன.

Facebook Comments