ஹிட்லரை கோரிய அமுனுகமவிற்கு ஜேர்மனியில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் நினைவூட்டல்

0
Ivory Agency Sri Lanka

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி, இனப்படுகொலையாளியும், பாசிச ஜேர்மனிய சர்வாதிகாரியுமான அடோல்ப் ஹிட்லரைப் போல மாறி நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென, அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12ஆம் திகதி திங்கட்கிழமை கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஹிட்லராக மாறுவார் என தானும், அவருக்கு வாக்களித்தவர்களும் எதிர்ப்பார்த்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

”கோட்டாபய ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்றதன் பின்னர் ஸ்ரீலங்காவில் ஓரளவிற்கு ஏகாதிபத்திய ஆட்சி நடக்கலாம் என்று மக்களும் அதேபோல மகாநாயக்க தேரர்களும் கருத்து வெளியிட்டு வந்திருந்தார்கள். அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ச ஆட்சியேற்று ஹிட்லரைப் போல மாறினாலும் பரவாயில்லை என் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில் மக்கள் தற்போது அரசாங்கம் மீது அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் அவர் ஹிட்லரைப் போல மாறாவில்லை என்பதே எனது கருத்தாகும். அவருக்கு வாக்களித்த 69 இலட்ச மக்கள் அவர் ஹிட்லரைப் போல ஓரளவுக்கேனும் செயற்பட வேண்டும் என எதிர்பார்த்த போதிலும் அவர் அப்படி செய்யவில்லை என்பதால் மக்கள் இன்று அதிருப்தியடைந்திருக்கின்றனர். ஒருமுறையாவது ஹிட்லரைப் போல செயற்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்

இந்த விடயத்தை கண்டித்துள்ள இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர், ஹோல்கர் சியூபர்ட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவியில், அடோல்ப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கான முன்னுதாரணமாகவும் அமையமாட்டார் என வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு ஹிட்லர்” இன்று இலங்கைக்கு நன்மை பயக்கும் எனக் கூறுவதை நான் கேள்வியுற்றேன். மில்லியன் கணக்கான இறப்புகளுடன், கற்பனைக்கு அப்பாற்பட்ட மனித துன்பங்களுக்கும் விரக்திக்கும் அடொல்ப் ஹிட்லரே காரணம் என்ற விடயத்தை நினைவூட்டுகிறேன். நிச்சயமாக எந்த அரசியல்வாதிக்கும் அவர் முன்மாதிரி இல்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூதர் சைபர்ட்டின் ட்விட்டர் கருத்தை வரவேற்றுள்ள, இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கினன், “எனது ஜேர்மனிய சகாவின் வார்த்தைகள் புத்திசாலித்தனமானவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதி ஹிட்லராக இருக்க விரும்பவில்லை, ஆனால் அவர் ஒரு ஹிட்லராக மாற தள்ளப்படலாம் என்று எச்சரித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்திற்கு உட்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘கண்டிப்பான’ கோட்டாபய

தான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றி காலத்தில் நிலவிய வன்முறை ஆட்சியைப் பேணுவதற்கான தனது தயார்நிலையை ஜனாதிபதி இந்த வருட ஆரம்பத்தில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

தங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையில்லை என்றும், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவே தமக்கு வேண்டும் எனவும் சில பௌத்த பிக்குகள் என்னிடம் கூறுகின்றனர், அதனைச் செய்ய முடியுமென ஜனாதிபதி அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெள்ள பிக்குகளின் ஆசிர்வாதம்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி தேரர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற பிறந்தநாள் விழாவில், இலங்கையின் அடுத்த நிர்வாகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஒரு ஹிட்லராகி, நாட்டில் முறையான நிர்வாகத்தை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

“நீங்கள் ஒரு ஹிட்லர் என்று அழைக்கப்படுகிறீர்கள். எனவே அவர்கள் இறுதியாக ஒரு ஹிட்லராக மாறியாவது இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை மகா சங்கம் உங்களுக்கு நினைவூட்டுகிறது” வெண்டருவே உபாலி தேரர் தெரிவித்த விடயம் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

”இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியாவது இதை சரி செய்யுமாறு நான் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.” என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வலியுறுத்தியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது பாதகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் கீழ் பாதுகாப்புப் படையினர் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிக்க, கடந்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கு அங்கீகாரம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments