இலங்கைத் தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைக்குமா?

0
Ivory Agency Sri Lanka

”உள்நாட்டில எமக்கு நீதி கிடைக்குமென்ட நம்பிக்க எனக்கில்ல, 10 வருடமா இவையல் எதையும் செய்யில்ல, சர்வதேசம்தான் எமக்கொரு தீர்வத்தரோனும். நாங்க கடவுளுக்கு பிறகு நம்பிரது சர்வதேசத்தத்தான்” என்கிறார் நல்லூரைச் சேர்ந்த முருகேசு.

இலங்கையின் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னரான காலத்தில் அடிக்கடிக் கேட்கக்கூடிய வசனங்களில் ஒன்று “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும்” என்பதாகும். இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் அரச படையினர் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு, உள்ளூர் பொறிமுறைகள் மற்றும் சர்வதேச ரீதியாக பரிந்துரைக்கப்படும் பொறிமுறைகள் ஊடாக நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தும் ஒரு சிலத் தமிழ் அரசியல் தலைமைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை படையினரை நிறுத்தி தண்டனைப் பெற்றுக்கொடுக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

“ஏதோ சொல்லினம், ஆனால் என்னென்றுத் தெரியில்ல, குற்றவியல் நீதிமன்றம், சர்வதேசம் எல்லாம் வெட்டிப் பேச்சு” என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகராசா ஜெகந்தன். ”பேசிப் பேசியே பத்து வருஷம் முடிஞ்சுது, பாப்பம் என்ன செய்யபோயினமெண்டு, எனக்கென்றால் இது சரிவருமா என்ற சந்தேகம் இருக்கு, இது இடியப்பச் சிக்கலப்பா” என்கிார் முல்லைத்தீவைச் சேர்ந்த சிவநேசன் யசீகரன்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court), சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாக வரையறுக்கக்கூடிய, இனப்படுகொலை, மனிதர்களுக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவென 2002இல் உருவாக்கப்பட்டது. 1998இல் ரோம் மாநாட்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான ரோம் சாசனம் உருவானது. அதற்கான வாக்கெடுப்பில் 120 நாடுகள் ஆதரவாகவும் அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, ஈராக், லிபியா, யேமன் மற்றும் கட்டார் ஆகிய ஏழு நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 21 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்குத் தொடுநர் ஒருவர் காணப்படுவார். எவ்வாறெனினும், பாரதூரமான குற்றங்கள் நிகழ்ந்தமைக்கான போதிய ஆதாரங்கள் இருப்பதையும், அவற்றை விசாரணை செய்யும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இருப்பதையும் அவர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உண்மையில் இலங்கையானது, ரோம் சட்டத்தை அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உள்ளூர் சட்டத்தில் இணைக்காத நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்வது சாத்தியமா? என்ற மிகப்பெரிய கேள்வி எம்முன்னே எழுகின்றது.
எனினும் இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியம் பேசக்கூடிய கட்சிகளில் ஒன்றாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சியுமான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மியன்மார் விடயத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென வாதிடுகிறது.

மியன்மார் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாடு அல்ல, ஆனால், மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலட்சக் கணக்கில் பங்களாதேஷில் அகதிகளாகக் குடியேறியுள்ளனர். பங்களாதேஷ் ரோம் சட்டத்தை தன் நாட்டுச் சட்டத்தில் இணைத்த நாடு. ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுடன் பங்களாதேஷ் தொடர்புபட்டிருப்பதால், அந்த அடிப்படையில் மியன்மார் விடயத்தை கையில் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஆகவே ”ரோம் சாசனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடாவிட்டாலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் குடியேறியுள்ளார்கள். ஆகவே அந்த மக்கள் ஊடாக இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லலாம், இதன் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

எவ்வாறெனினும், மியன்மார் விடயத்தைப்போன்று இலங்கை விடயத்தை கையாள முடியாது என்கிறார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன். ”மியன்மார் விடயத்தில் ஐக்கிய நாடுள் மனித உரிமைகள் பேரவையே அந்தப் பொறிமுறையை உருவாக்கியுள்ளது. நாம் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையிலிருந்து விடுவிப்பதற்கான கோரிக்கையை முதலில் விடுத்துவிட்டு பின்னர் அதே ஆவணத்தில் மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறிமுறையை கோருவதானது முன்னுக்குப்பின் முரண்பாடாக இருக்கும் என்பதால் அந்த பொறிமுறை சாத்தியமில்லை” என்பதாக அவரது கருத்து அமைந்துள்ளது.

அவ்வாறு இடம்பெறாவிடின், அடுத்ததாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை. இதற்கான சாத்தியங்களும் அரிது என்பதே பலரது வாதம்.

”மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிடம் கையளிக்கப்பட வேண்டும். பொதுச் சபையானது அதனை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்து இணக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனைவிட சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படாமல் இருக்க வேண்டும்” என்கிறார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன்.
”பாதுகாப்புச் சபையின் ஊடாக செல்வதே எமக்குள்ள ஒரேவழியாகும். ஆனால் இதில் இரத்து அதிகாரத்தினைக் கொண்டுள்ள ரஷ்யா, சீனா இலங்கையை காப்பாற்றும் என்பதே எனது தர்க்கமாகும்.” என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ சுமந்திரன்.

பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரத்தைக் கொண்டுள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தொடர்பிலான இந்த இருவரின் கருத்திலும் காணப்படும் யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சீனாவும், ரஷ்யாவும் இலங்கையுடன் எத்தகைய உறவைப் பேணுகிறது என்பது இலங்கையில் உள்ள சிறு பிள்ளைக்கும் தெரியும். அதனைவிட தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகள் ஐரோப்பிய வலய நாடுகளே, அந்த நாடுகளின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் விசாரணைகளுக்கு நிச்சியமாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இணக்கத் தெரிவிக்கப்போவது இல்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிடுவதுபோல் இந்த விசாரணைக்கான ஆரம்ப செயற்பாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்குமென வைத்துக்கொள்வோம், எத்தனை நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும் என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு ஏதோ சில நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும், இலங்கையில் இழைக்கப்பட்டடதாகக் கூறப்படும் குற்றங்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி, சந்தேகநபர்களை அடையாளம் காணவேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனிநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமேத் தவிர ஒரு அரசின் மீதல்ல, யுத்தக் குற்றங்களில் அரசு ஈடுபடவில்லை, மாறாக அரசின் அறிவுறுத்தலில் தனிநபர்களே ஈடுபட்டார்கள் என வாதிட்டாலும், அந்த நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்த இலங்கையின் அனுமதி அவசியம். சாட்சிகளைத் திரட்ட விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசு அனுமதியளிக்க வேண்டும். இது எந்த வகையில் சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது.

”ஐ.நா செயலாளர் நாயகத்தின் மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை, அதன் பின்னரான இரண்டு அறிக்கைகள் என மொத்தம் மூன்று அறிக்கைகள் இலங்கையில் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாலேயே 2012ஆம் ஆண்டு ஐ.நா செயலாளர் நாயகம், நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பித்தார். குற்றங்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் அறிக்கைகளிலேயே காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு பல மாதங்களாக இலங்கையில் சாட்சியங்களை திரட்டியுள்ளது. ஆகவே அந்த சாட்சியங்களையும் வழக்கும் தொடருநர்கள் பயன்படுத்த முடியும், சாட்சியமளிக்க பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்” என செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

”சாட்சிகளைத் சேகரித்த பின்னர் சந்தேகநபர் யார் என்பதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனங்கண்டு அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கும், சந்தேகநபர் தாமாக வழக்கில் முன்னிலையாகலாம், அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில், நபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவைப் பிறப்பிக்க முடியும். சந்தேகநபரது நாடு அல்லது அவர் பயணிக்கும் மற்றொரு நாடு அவரைப் கைது செய்து ஒப்படைத்தால் மாத்திரமே வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்கிறார்” சட்டத்தரணி நவநீதன்.

”இந்த விடயம் ஒரு கட்டத்தை கடந்த பின்னர் இடம்பெறும் விடயங்களே இவை. ஆனால் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக விசாரணைக்கே வாய்ப்பில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஏனென்றால் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரங்களுக்கு உட்பட்டு இலங்கை அரசாங்கமே அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். வேறு எந்த வகையிலும் அந்த பேரவை அதிகாரம் செலுத்த முடியாது. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் சாட்சிகளை திரட்டி விசாரணைகளை முன்னெடுத்துச் கணிசமாக முன்னோக்கிச் செல்ல முடியும். ஆகவே இதனை சாதகமான விடயமாகவே பார்க்க வேண்டும். பூகோள அரசியல் சூழ்நிலைக்கு அமைய, இந்தியா சிலவேளைகளில் இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்.” என்பதே செல்வராசா கஜேந்திரனின் கருத்து.

எனினும் இந்த விடயம் சாத்தியமில்லை என்பதோடு ஒருவித மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கையை மாத்திரம் வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த விடயங்கள் சாத்தியமில்லை என்றால், மூன்றாவதாக இலங்கை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறைக்கு முகங்கொடுக்க வேண்டும். இலங்கை அவ்விதமாக செயற்படப்போவது இல்லை என்பதே யதார்த்தம். இதுத் தொடர்பில் எவ்வித சந்தேகமும் ஏற்பட வாய்ப்பில்லை.

”அன்று போருக்கு சென்ற எவரும் இனப்படுகொலை நிகழ்த்துவதற்காக அங்கு செல்லவில்லை. இராணுவத்தினருக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் இணை அனுசரணையாளர் என்ற துரோக தீர்மானத்திலிருந்து நாங்கள் விலகினோம்.” இது பிரதமர் மஹிந்த ராஜபக்ச யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு, 2021 மே 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

இந்த உரை எமக்கு பல உண்மைகளை உணர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையே நிராகரித்து அதிலிருந்து வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ள இலங்கை அரசாங்கம், எங்கள் பிரச்சினையை நாங்களே பார்த்துக்கொள்வோம் என அறிவித்துள்ளது. மேலும் இலங்கை பாதுகாப்புப் படையினர் எவ்வித குற்றங்களையும் இழைக்கவில்லை எனவும், மனிதாபிமான நடவடிக்கைகளையே முன்னெடுத்ததாகவும் அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவித்து இலங்கை அரசு எந்த வகையிலும் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்காது என்பதே யதார்த்தம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட ”அறிவியற் கிழமை” சட்டமூலம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண சட்ட மன்றம் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம் சட்டத்தை ஏகமனதாக அங்கீகரித்தும் இருக்கின்றது. இலங்கையில் ஒரு இனவழிப்பு நடைபெற்றுள்ளதென்பதை அங்கீகரிப்பதாக அந்த சட்டம் குறிப்பிடுகின்றது.

புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் (சுமார் மூன்றரை இலட்சம்) நாடுகளில் ஒன்றான கனடாவின், ஒரு பிராந்தியத்தில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளபோதிலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்தும் விடயத்தில் இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவது இல்லையென, சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ் இரத்தினவேல் தெரிவிக்கின்றார். ”தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்” ஒரு கல்வி ரீதியான விடயமாக அமையுமேத் தவிர வேறு விடயங்களில் தாக்கம் செலுத்தப்போவது இல்லை. இலங்கையின் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானமானது, ஒரு நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக அந்த நாட்டு மக்களாலேயே கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆகவே இது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் கனடாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அவ்வளவு வலுவானதல்ல என சட்டத்தரணி இரத்தினவேல் தெரிவிக்கின்றார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தன்னுடைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலான வரலாற்றில், அஹமட் அல் பகி அல் மஹாடி (மாலி – 2018), ஜேர்மெயின் கடாங்கா (கொங்கோ குடியரசு – 2014) தோமஸ் லுபாங்கா (கொங்கோ குடியரசு – 2012) ஆகிய மூன்று பேரை மாத்திரமே குற்றவாளிகளாக அடையாளம் கண்டிருந்தது. காரணம், அதிகார வரம்பு, மட்டுப்பாடுகள், சாட்சியங்களைத் திரட்டும் இயலுமை, வழக்குத் தொடர்வதற்கான படிமுறைகள், விசாரணைகளின் தன்மை உள்ளிட்ட பல விடயங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சில வரையறைகள் காணப்படுகின்றன.

தார்பூர் பிரச்சினை, வடக்கு உகாண்டா விடயம், கொங்கோ குடியரசின் கிழக்கு பிரச்சினை, மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசின் பிரச்சினை ஆகிய விடயங்களில் ஓரளவு முன்னேற்றகரமான படிகளைத் தாண்டியிருந்தாலும், அதற்கு எடுத்துக்கொண்ட காலம் மிக நீண்டது.

இந்த விடயங்களை அடிப்படையாக் கொண்டு ஆராய்கையில், தமிழர் விடயத்தில், இலங்கையை அவ்வளவு இலகுவாக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்திவிட முடியாது. அதற்கான செயற்பாடுகள் மிக நுணுக்கமாகவும், அவதானமாகவும் கையாளப்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டாலும், அதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அதனைவிட அதற்கு சர்வதேசத்தின் மிகப்பெரிய ஒத்துழைப்பு அவசியம். மாறுபடுகின்ற பூகோள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த நாடுகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கரிசனைகொள்ளுமேத் தவிர, ஒரு சிறு இனக்குழுவிற்காக செயற்படுமா என்பது சந்தேகமே.

இவ்வாறான சூழ்நிலையில், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளையும் மாத்திரம் வைத்துக்கொண்டு யுத்தக் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றதாக நிரூபிக்க முடியுமென நம்புவது யதார்த்தத்துடன் ஒப்பிடும்போது சாத்தியமில்லாத ஒன்று என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

ச.பார்தீபன்

Facebook Comments