துமிந்தவின் விடுதலை ‘கைதிகளின் மனித உரிமை மீறல்’

0
Ivory Agency Sri Lanka

அனைத்து கைதிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கையை மீறுவதும், அரசுக்கு சார்பான கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்குவதும் ஏனைய கைதிகளின் அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மீறுவதாக அமையுமென கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

அரசியல் தொடர்பு மற்றும் பண பலத்தின் அடிப்படையில் துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்ப்பதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

“ஒரு கைதியை விடுவிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் ஒரு நபரின் சிவில் அந்தஸ்து, பண பலம், அதிகாரம் அல்லது அரசியல் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.”

“துமிந்த சில்வா விடுதலை மற்றும் நியாயத்தின் மந்தநிலை” என்ற தலைப்பில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை குற்றவாளி என்பதோடு, மரண தண்டனை விதிக்கப்பட்ட, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேற்பார்வை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா பொசன் போயா தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளூர் மற்றும் சர்வதேசத்தின் எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளார்.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் இலங்கை ஜனாதிபதிகள் மன்னிப்பு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் பல எடுத்துக்காட்டுகளை முன்மொழிந்துள்ளார்.

“மரண தண்டனை விதிக்கப்பட்ட, மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி, சமன் தேவாலாயத்தின் பஸ்நாயக்க நிலமே அன்டன் தென்னகோன், ரோயல் பார்க் வழக்கின் ஜூட் ஜெயமஹ மற்றும் மிருசுவில் படுகொலையின் சுனில் ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதியின் மன்னிப்பின் காரணமாக நியாயமற்ற முறையில் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.”

ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரம் அரசியலமைப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் அல்லது சில சுயாதீன அதிகார அமைப்பின் ஊடாக மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என கடந்த காலத்தில் ஒரு சமூக விவாதம் ஆரம்பமானதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி, ஏனெனில் ஜனாதிபதியின் இந்த அநியாய சர்வாதிகாரம் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

துமிந்தா சில்வா வழக்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள பின்னணியில், அனைத்தையும் புறந்தள்ளுவதன் ஊடாக, நீதிமன்ற உத்தரவுகள் பயனற்றவை என பொது மக்கள் அவநம்பிக்கைக் கொள்ள அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

“சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதில் நீதித்துறை செயலற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தானது.”

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அரசியல் பழிவாங்கல் என விளக்கமளித்து யாராவது பொதுமக்களை தவறாக வழிநடத்த முயன்றால், அது ஒரு ஜனநாயக நடைமுறை அல்ல என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

“இலங்கையின் வரலாற்றை அவதானிக்கையில், அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள் அரசியல் பழிவாங்ல் என்ற சொல்லின் ஊடாக தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்விக்கும் பணிகளை செய்து வருகின்றனர்”

எனவே, ‘துமிந்த ஒரு மனிதர்’ என்ற கொள்கைக்கு பதிலாக, கைதிகள் மனிதர்கள் என்ற கொள்கைக்கு அமைய, 25,000ற்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டமைப்பில், நிவாரணம் வழங்குவதன் அவசியத்தை, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டித்துள்ளன.

கைதிகள் எதிர்ப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழு நாட்டில் அமைந்துள்ள இரண்டு சிறைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகள் தமக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி, கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் விசேட மன்னிப்பு வழங்கப்பட்டதை அடுத்து, மஹர மற்றும் வெலிக்கட சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் குழு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளது.

வெலிகடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் குழு ஒன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments