காவல்துறைக்கு பொறுப்பான ரியர் அட்மிரிலிடம் ஆசிரியர் சங்கத் தலைவர் சவால் (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராக தலைநகரில் போராட்டங்களை நடத்திய தன்னையும் மற்றவர்களையும், தடுத்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆவணத்தை வெளிப்படுத்துமாறு, விமானப்படை தளத்தில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர், துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் சவால் விடுத்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பட்டியலுக்கு அமையவே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும் பலர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாக, காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

“ஆவணம் எங்கே என்று நாங்கள் கேட்கிறோம். அந்த ஆவணத்தை உடனடியாக பகிரங்கமாக்குங்கள்” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் ஜூலை 13 செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் நடத்திய ஊடகப் பேச்சாளர் சந்திப்பில் சவால் விடுத்துள்ளார்.

ஜோசப் ஸ்டார்லினும் அவரது குழுவும் எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐந்து நாட்கள் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் நேற்று விமானப்படை தளத்திற்கு வந்ததை அடுத்து, தெரியவந்துள்ளது.

“இங்குள்ள அனைவர் தொடர்பிலும் காவல்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக என அதிகாரி கேட்டார். இங்கு உள்ளவர்களின் பெயர்கள் எதையும் உத்தியோகபூர்வமாக வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.”

தம்மை சந்திக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிக்கு, விமானப்படை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என, ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்கப்படும்

தொற்றுநோயை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தின் முன்னெடுக்கும் அடக்குமுறை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்க இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற ஆணையாளரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை எதிர்த்து மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில், ஜூலை 8ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், வெகுஜன செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் சட்டவிரோதமாக, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்த நிலையில், நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும்போது, காவல்துறையினரால் தடுக்கப்பட்ட அவர்கள் பேருந்துகளில் ஒரு விமானப்படை தளத்திற்குள் தனிமைப்படுத்தலுக்காக கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

விமானப்படை தளத்தில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரை வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருப்பதானது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என முன்னாள் பிரதமர் புதிய நிதியமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 9) உரையாற்றிய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்தால் நன்கு அறியப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் விடுதலை செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறைக்கு பொறுப்பானஅமைச்சர் சரத் வீரசேகர, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என கூறினார்.

அரசாங்கத்தின் சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.ஜெயசிங்க. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் பிரதித் தலைவர் ரசிக ஹந்தபாண்கொட ஆகியோர் கையெழுத்திட்ட மனு நேற்று பிற்பகல் ஐரோப்பிய ஒன்றியத்தின், மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

“கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுடன் இணைந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் என்ற போர்வையில், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர்கள், வெகுஜன செயற்பாட்டாளர்கள், விவசாயிகள், ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசாங்கம், மனித உரிமை மீறல்கள் ஊடாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள விடயத்திற்கு எதிராக அந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது”

ஜூலை 12ஆம் திகதி, ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் சிவில், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்காக அமைதியான ஒன்று கூடல் மற்றும் கூட்டம் கூடுவதற்கான உரிமையைப் பாதுகாக்கும் ஐ.நா. விசேட அறிக்கையாளருக்கும் குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments