தொற்று நோயால் உயிரிழக்கும் சுகாதார ஊழிர்களின் சம்பளத்தை தொடர்ந்து வழங்க கோரிக்கை

0
Ivory Agency Sri Lanka

கடமையாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் ஊதியத்தை தொடர்ந்து அவர்களது குடும்பத்திற்கு வழங்குமாறு நாட்டின் முன்னணி சுகாதார பராமரிப்பு சேவை சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 6,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொடிய தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஒரு முன் வரிசை குழுவாக, சுகாதார ஊழியர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் தொடர்ந்து பணியாற்றுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தீவிரமான தொற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தொடர்ந்து அவர்களின் ஊதியத்தை வழங்குவது குறித்து அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம், சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோயால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் இதைச் செய்யுமாறு தொழிற்சங்கத் தலைவர் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சேவையில் இருக்கும்போது கொரோனா நோயால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை அவர்களின் பதவிக்காலம் நிறைவடையும் வரை, அவர்களது குடும்பங்களுக்கு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.”

28 காவல்துறையினர்

ரீலங்கா காவல்துறையின் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த 28 காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை அவர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு, செப்டெம்பர் 2 ஆம் திகதி, அமைச்சின் செயலாளருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Facebook Comments