இலங்கையில் நாளொன்றுக் குறைந்தது நான்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகும் நிலையில், பெண்களுக்கான கட்டணமில்லா உதவி தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வயோதிப தாயொருவருக்குக்கூட வீதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர் தர்மசங்கடத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய, 1938 என் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் பத்தரமுல்லை செத்சிறிபாய வளாகத்தில் இதன் ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
“இந்த தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். நாட்டில் எங்கிருந்தும் 1938 என்ற இலவச இலக்கத்திற்கு அழைத்து பெண்களுக்கு ஏதேனும் துன்புறுத்தல்கள் ஏற்பட்டால் உடனடியாகத் தெரிவிக்கலாம்.”
இந்த நிகழ்வை ஒட்டி, 1938 இலவச மகளிர் உதவி இலக்கத்தின் தேசிய தரவுத்தளத்தை தொடங்குதல், தேசிய மகளிர் குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தேசிய மகளிர் குழுவின் தலைவி ஷிரந்தி பியறிஸ் திஸாநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1938 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் “நம் நாட்டில் ஒரு வயதான பெண் கூட தனியாக வீதியில் செல்ல முடியாது” எனக் கூறியிருந்தார்.
“காலையில் எழுந்து பிரித் கேட்கும், இரவில் பிரித் கேட்டு உறங்கச் செல்லும், முழு நாழும் பௌத்த உபதேசங்களை கேட்க விகாரைக்குச் செல்லும் நமது நாட்டில், பொலிஸார் மாத்திரமல்ல ல ஒட்டுமொத்த மக்களும் வெட்கப்பட வேண்டும்” என ரியர் அட்மிரல் வீரசேகர கொழும்பில் ஊடவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருந்தார்.
பொலிஸுக்குள் பெண்கள் மற்றும் ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கையை அறிவிக்கவில்லை.
ஒரு நாளைக்கு நான்கு கற்பழிப்புகள்
இலங்கையில் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாகவும், நாளொன்றுக்கு குறைந்தது நான்கு பெண் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் நாட்டின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரி கடந்த வருடம் வெளிப்படுத்தினார்.
குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி 2019ஆம் ஆண்டின், குற்றப் புள்ளி விபரங்களை மேற்கோள்காட்டி 2020 ஆம் ஆண்டு இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
பேஸ்புக் மூலம் வெளியிடப்பட்ட காணொளியில், 2019 ஆம் ஆண்டில் நாட்டில் 1,642 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.