மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

0
Ivory Agency Sri Lanka

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்கள் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வுகாணப்படாவிட்டால் பேரழிவு மரணங்களுக்கு வழிவகுக்கும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஐந்து யோசனைகளை சுகாதார செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளது.

மருந்துகளுக்கு பணம் செலவழிக்க முன்னுரிமை கொடுப்பது கடினம் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

புதிய நாணயக் கொள்கையை அறிவிக்கும் முகமாக ஏப்ரல் 8ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலாநிதி நந்தலால் வீரசிங்க, பெரும்பான்மையான மக்களுக்கு அவசியமான, அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் போன்றவற்றுக்கு வழங்கும் முன்னுரிமையை மருந்துகளுக்கும் வழங்க முடியுமா என்பதை ஆராய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மருந்துப் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யாவிட்டால், கொவிட், சுனாமி மற்றும் உள்நாட்டுப் போரினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை விட, பேரழிவுகரமான இறப்பு எண்ணிக்கை ஏற்படக்கூடும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின், மோசமான பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தினால், மக்களின் அடிப்படை உரிமையான வாழும் உரிமை மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை நிலைநாட்ட தற்போதைய அரசாங்கம், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அதிகாரிகள் தவறியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.

“இலங்கையில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார சேவையைப் பேணுவதற்குத் தேவையான ஏனைய உபகரணங்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் இன்னும் மோசமாகும்” என இராஜாங்க அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த பாரதூரமான சுாதார நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் மேற்கொள்ள வேண்டிய பின்வரும் ஐந்து நடவடிக்கைகள் குறித்து சுகாதார செயலாளருக்கு அறிவிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1. நாட்டில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தல்,

2. தொடர்புடைய அனைத்து தரப்பினராலும் அழைக்கப்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் நிலையை மதிப்பாய்வு செய்தலல்,

3. தற்போது எங்களிடம் உள்ள மருந்துகளின் சரியான நிர்வாகத்திற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க சுகாதார அமைச்சு ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைத்தல்,

4. மருந்து தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஆதரவையும் சர்வதேச உதவியையும் பெறுதல்,

5. வெளிநாட்டு உதவியுடன் பெறப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்குதல்.

சுகாதார அமைச்சுக்கு போதிய நிதியுதவி வழங்குவதன் மூலம் நாட்டு மக்களுக்கு சுகாதாரத்திற்கான அடிப்படை மனித உரிமைகள் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், போரின் இறுதி கட்டத்தில், கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்த மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் வன்னிக்கு மருந்துகளை அனுப்பாமல் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட போது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தின் போருக்கு ஆதரவளித்தது.

வைத்தியர்கள் உட்பட வைத்திய ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைத்தியசாலைகள் மீது இடைவிடாத குண்டுவீச்சைத் தடுக்க தொழிற்சங்கம் எதுவும் செய்யவில்லை.

இந்த அழிவை அங்கீகரித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மருந்துப் பற்றாக்குறையினால் சுகாதாரத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை வைத்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் குடிமக்களிடம் மேலும் அழைப்பு விடுத்துள்ளது.

நிதி நெருக்கடியால் மருந்து மற்றும் வைத்திய உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என சுகாதார சங்கங்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றன.

குறைந்த பட்சம் சுகாதார அமைச்சு தற்போதுள்ள யதார்த்தத்தை மறைத்து அரசியல் பாதுகாப்பை தேடுவதை விடுத்து, உண்மையான நிலைமையை வெளிப்படுத்தி சிறந்த நிர்வாக அணுகுமுறையைப் பின்பற்றுவதை விடுத்து, நீண்ட கால நெருக்கடியை தெரிந்தே தவிர்த்து வந்தமை, தற்போதைய நெருக்கடி இரட்டிப்பானதோடு, மூன்று மடங்கு அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார்.

Facebook Comments