ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளமைக்கு அமைய, இலங்கையின் சனத்தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் தமது அன்றாட உணவைக் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ள காரணத்தினால், எதிர்கால பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாடு காரணமாக மூளை வளர்ச்சியின்மை உருவாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கத் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஜூன் 14, 2022 அன்று வெளியிடப்பட்ட உலக உணவுத் திட்டத்தின் (WFP)அறிக்கையின்படி, இலங்கையில் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன, மேலும் 4.9 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் சபை ஆகியன இந்த நாட்டில் உள்ள பாடசாலைகளில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
“ஒரு குழந்தையின் மூளையின் 80% வளர்ச்சி கருவுற்ற காலத்திலிருந்து 5 வயது வரை என்பதை நாங்கள் அறிவோம், அந்த நேரத்தில் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இன்று திரிபோஷம் கூட வழங்கப்படுவதில்லை. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் திரிபோஷ விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. இந்த திரிபோஷ கர்ப்பிணி தாய்மார்கள், சிறு குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது.
அதனால் இப்போது என்ன நடக்கிறது என்றால், சிறுவர்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காத நிலையில் மூளை வளர்ச்சியடையாத நிலையில் கல்வி முறைக்குள் வருகிறார்கள். இது நாட்டை நீண்டகாலத்திக்கும், ஏனெனில் இது இன்றோ நாளையோ பாதிப்பினை ஏற்படுத்தாது.”
இது நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அப்பாற்பட்ட விடயம் என ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த நான்கு மாதங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) 1.7 மில்லியன் இலங்கையர்களின் அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 47.2 மில்லியன் டொலர்களை திரட்டுமாறு உலக தொண்டு நிறுவனங்களிடம் ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைத் திட்டத்தின் அடிப்படையில், இந்த வாரம் கொழும்பில் வறிய பகுதிகளில் உள்ள 2,200 பாதிக்கப்படக்கூடிய கர்ப்பிணிப் பெண்களுக்கு வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 15,000 ரூபாய் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலக உணவுத் திட்டம் மற்றும் அரசாங்கம் இணைந்து கடந்த ஏப்ரலில் 17 மாவட்டங்களில் ஏழைக் குடும்பங்களின் அவசர உணவுப் பாதுகாப்புக் கணக்கெடுப்பை நடத்தியது, இதில் 86% குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உணவைக் குறைத்துக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மலிவான, குறைவான சத்துள்ள உணவை வாங்குதல் (95%), ஒரு குடும்பத்திற்கு உணவின் பங்கைக் கட்டுப்படுத்துதல் (83%) மற்றும் தினசரி உட்கொள்ளும் உணவின் எண்ணிக்கையைக் குறைத்தல் (66%) ஆகியவை இதில் அடங்கும்.
இதற்கிடையில், சீன தூதரகம் (ஜூன் 14) தனது உத்தியோகபபூர்வ ட்விட்டர் கணக்கில், “பாடசாலை உணவுத் திட்டம்” மூலம் 10,000 மெட்ரிக் தொன் அரிசி ஏழை சிறுவர்களுக்கு வழங்கப்படும் என பதிவிட்டுள்ளது.
இதற்கமைய, அதன் முதலாவது மற்றும் இரண்டாவது தொகை அரிசி ஜூன் 25 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.