தமிழ் ஆர்வலர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது

0
Ivory Agency Sri Lanka

வடக்கு, கிழக்கு மக்களின் நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் செய்தி வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன ஆர்வலர்கள் மீதான அரச பாதுகாப்புப் படையினரின் துன்புறுத்தல் அடக்குமுறை ரணில் விக்ரமசிங்க நிர்வாகத்தின் கீழும் தொடர்கிறது.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்காக வெளிநாடு செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த முயற்சி தீவிரமடைந்துள்ளது.

இந்த வாரத்தில் மாத்திரம் கிழக்கு ஊடகவியலாளர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கொழும்பு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு (CTID) விசாரணை தொடர்பான எந்த காரணமும் தெரிவிக்கப்படாமல் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக மன்றத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் செப்டெம்பர் 9ஆம் திகதியும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன் செப்டெம்பர் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

செங்கலடியில் உள்ள ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டுக்கு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி அழைப்பு கடிதத்தை வழங்கச் சென்ற மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர் மனைவி மற்றும் குடும்பத்தினரின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்துள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட குழுவினரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் செல்வகுமார் நிலாந்தன், பொருளாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோர் மாகாணத்தை விட்டு வெளியேற நேரிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடந்த மே மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்தார்.

மூன்று மணி நேர விசாரணை

2009 ஆம் ஆண்டு மே மாதம் அழிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்ற, தற்போது செயலிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தைச் சேர்ந்த செல்வகுமார் நிலாந்தனிடம் விசாரணை நடத்தியது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தயாமோகனுக்கும் தொடர்பு உள்ளதா என்றும், நாதம் மற்றும் மீனகம் இணையத்தளங்களை நடத்திச் செல்வதில் ஏதாவது தொடர்பு உள்ளதா எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்று மணி நேரத்துக்கும் மேலான கடுமையான விசாரணைக்குப் பின்னர், ஊடகவியலாளரிடம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது, கடவுச்சொற்களைப் பற்றியும் வங்கிக் கணக்கு குறித்தும் விசாரித்தது.

“நீங்கள் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தீர்களா? உங்கள் உறவினர்கள் யாரேனும் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்தார்களா? புலிகளுக்கு உதவி செய்தீர்களா? அவர்களுடன் உங்களுக்கு தொடர்பு இருந்ததா? ” போன்ற ஆதாரமற்ற கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

செல்வகுமார் நிலாந்தன் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருகின்றார் எனவும், அப்படியானால் அதற்கு எவ்வாறு நிதி கிடைக்கிறது எனவும் அவரது ஊடகவியல் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொலிஸாரின் துன்புறுத்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் நிலாந்தன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ) ஊடகவியலாளர்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

“இலங்கை ஊடகவியலாளர் செல்வகுமார் நிலாந்தனை விசாரணை செய்து, அவரது சமூக ஊடகங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்நுழைய கட்டாயப்படுத்துவதன் ஊடாக தமிழ் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின், ஆசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் பட்லர் தெரிவித்திருந்தார். “அதிகாரிகள் நிலாந்தனை அச்சுறுத்துவதை நிறுத்தி, அவரையும் ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களையும் சுதந்திரமாக செய்தி வெளியிட அனுமதிக்க வேண்டும்.”

ஒரு வருடத்திற்கு முன்னர், சபாரத்தினம் சிவயோகநாதனை விசாரணைக்கு வரவழைத்த CTID இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்ட வட்ஸ்அப் அரட்டை குழுவினை நடத்துவது நீங்களா என பொலிஸார் அவரிடம் கடுமையாக விசாரித்தனர்.

அப்படிப்பட்ட அரட்டைக் குழுவில் தன்னை யார் இணைத்தது என தெரியாது எனவும், பின்னர் அந்த வட்ஸ்அப் அரட்டைக் குழுவில் பரிமாறப்பட்ட தகவல்களைப் பார்த்து தான் அந்தக் குழுவில் இருந்து வெளியேறியதாகவும் சபாரத்தினம் சிவயோகநாதன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்திய பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சிவயோகநாதனின் கையடக்கத் தொலைபேசி மற்றும் பேஸ்புக் போன்றவற்றைக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தி அவரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றதாக அவர் மேலும் கூறுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நீண்ட நடைப்பயணத்தை ஆரம்பித்த P2P அமைதிப் பயணத்தின் தலைவர்களில் இவரும் ஒருவர்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நடத்தை தொடர்பில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளது.

Facebook Comments