இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் காணாமல் போனமைக்காக ஆதாரம் இல்லை என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் அண்மையில் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ‘பைலா’ என அம்பலமாகியுள்ளது.
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களது எதிர்த் தரப்பால் கடத்தப்பட்டவர்கள் என ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்திற்கு தெரிவித்த OMP தலைவர் மகேஷ் கட்டுலந்த, இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் விடயத்தை கண்டித்துள்ளதோடு, அவ்வாறு நிகழ்ந்தமைக்கான எவ்வித சாட்சிகளும் இல்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமன்றி காணாமல்போனோர் குறித்த அலுவலகமே இதுவரை ஏற்றுக்கொண்ட தகவல்களை மறுப்பது அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக நாட்டின் சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டுகிறார்.
“வெளிநாடுகளில் ஐம்பது பேர் உள்ளனராம், அவர்களில் சிலர் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனராம். இது சமாளிக்கும் ஒரு கருத்து. ஏனென்றால் அந்த பெற்றோர் மிகத் தெளிவாக தமது உறவுகளை கையில் ஒப்படைத்தார்கள். எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டால், எந்த நபர் நம்பிக்கையுடன் இந்த அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய முடியும்.”
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு முன்பாக ஒக்டோபர் 27ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தை முன்னெடுத்த பின்னர் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
காணாமற்போனதாகத் தகவல்கள் கிடைத்தாலும், சுமார் 50 பேர் வெளிநாட்டில் இருப்பதை தனது அலுவலகம் கண்டுபிடித்துள்ளதாக OMP தலைவர் தெரிவித்துள்ளார்.
அலுவலகம், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான தகவல்களை வெளியிடக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர், ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தாம் செய்த கொலைகளை மூடிமறைப்பதற்காகவே இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டதாக வலியுறுத்துகின்றார்.
“அரசாங்கத்திற்கு வேண்டியதை தெரிவிக்காமல், இதில் காணப்படும் உண்மையை வெளிப்படுத்துங்கள். அரசாங்கத்திற்கு தேவையான விடயங்களையே வெளிப்படுத்துகின்றன. அனைத்து அரசாங்கங்களும் இதனையே செய்தன. தாங்கள் கொன்றவர்களை இறந்துவிட்டார்கள் என சொல்ல இந்த அரசுகளுக்கு முதுகெலும்பு இல்லை. பிறகு இது பொய் என்கிறார்கள்.”
தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்த 50 புலம்பெயர்ந்தவர்களின் விபரங்களை வெளியிடுமாறு பிரிட்டோ பெர்னாண்டோ சவால் விடுத்துள்ளார்.
“இப்போது அந்த ஐம்பது பேரையும் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
காணாமல் போனோர் அலுவலகம் தவறான பாதையில் செல்வதாக தெரிவித்த காணாமல் போனவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ முப்பது வருட போராட்டத்தின் பின்னர் கிடைத்த இந்த அலுவலகத்தை தவறான பாதையில் பயணிப்பதை பார்த்து அமைதியாக இருப்பதற்குப் பதிலாக அதை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“எனவே ஓஎம்பி தவறான வழியில் செல்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். 30 வருடமா கஷ்டப்பட்டு பெற்ற இதனை, இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்த நாங்கள் இடமளிக்கமாட்டோம். அதனை சரியான பாதைக்குச் கொண்டுச் செல்வதற்கான முயற்சியை கைவிடப்போவது இல்லை.”
காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து எந்த நம்பிக்கையும் தெரிவிக்காத, 2075 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மார்கள் தலைமையிலான போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணையை கோருகின்றனர்.
“காணாமல் போனோர் அலுவலகம் உண்மையை வெளிப்படுத்தும் விசாரணைகள் குறித்து ஏன் மௌனமாக இருக்கிறது?”, “இல்லை. இல்லை. காணாமல் போனவர்கள் இல்லை.” , “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குங்கள்”, ” தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்”, “உண்மையை வெளிப்படுத்துங்கள், நீதியை நிலைநாட்டுங்கள், காணாமல் ஆக்கப்படுவது மீளவும் நடைபெறாமல் தடுப்போம்”, “காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாககக் கூறப்பட்ட இழப்பீடு எங்கே? “உண்மையை வெளிப்படுத்துங்கள்” போன்ற பதாகைகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இணைந்து அமைதிப் போராட்டம் நடத்திய காணாமல் போனவர்களின் குடும்ப ஒன்றியம், இழப்பீட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் ஆகியோருக்கு அவர்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தது.
கே.ஜே. பிரிட்டோ பெர்னாண்டோ, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், தமது அமைப்பு அறிந்த வரையில், ஆயுதப் படைகளின் உறுப்பினர்களால் காணாமல் ஆக்கப்பட்டமை உட்பட, OMP அலுவலகத்திற்கு சுமார் 19,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கூற்றுப்படி தெற்கில் மாத்திரம், 1989ஆம் ஆண்டுடன் தொடர்புடைய காணாமல்போதல்கள் அறுபதாயிரம் எனத் தெரிவித்துள்ள செயற்பபாட்டாளர், 1996ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் பதிவாகியவர்களின் எண்ணிக்கை 26,000ஐ நெருங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு (LLRC) எழுத்துமூலம் அளித்த வாக்குமூலத்திற்கு அமைய, வடக்கில் இராணுவமற்ற வலயத்திற்குள் பிரவேசித்தவர்களுக்கும் யுத்தத்தின் பின்னர் வெளியேறியவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் 147,600 என காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, புதிய OMP தலைவர் மகேஷ் கட்டுலந்தவிற்கு நினைவூட்டியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அரசாங்கம் அறிவித்தமைக்கு அமைய, மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள OMP பிராந்திய அலுவலகங்களில் காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 14,988 ஆகும்.
போரின் இறுதிநாட்களில் அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பின்னரும், உறவினர்களால் பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் கதி என்னவென்பதை அரசாங்கத்திடம் தெரிவிக்கக் கோரி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
காணாமல் போனோர் அலுவலகம் (OMP)மைத்திரி ரணில் அரசாங்கத்தால் 2018 பெப்ரவரி 28ஆம் திகதி அவர்களின் தலைவிதியைக் கண்டறிய ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த அலுவலகத்தால் நெருங்கிய உறவினர் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நாட்டில் காணாமற் போனவர்கள் தொடர்பில் கூடுதலான குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் மீதே சுமத்தப்பட்டுள்ளன.
மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியம், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ ரத்தொலுவையில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு முன்பாக 32ஆவது தடவையாக வருடாந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தது.