லொஹான் ரத்வத்த தமிழ் கைதிகளுக்கு துப்பாக்கியை நீட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தமை “நிரூபணமாகியுள்ளது“

0
Ivory Agency Sri Lanka

கோட்டாபய ஆட்சிக் காலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக் கொல்ல முயற்சித்தமை ஒன்றரை வருடங்களின் பின்னர் அம்பலமாகியுள்ளது.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அந்த நேரத்தில் விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் ஆராய்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியினால் ஒரு வருடம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நீதிபதி ஒருவரை மாத்திரம் உள்ளடக்கிய ஒருநபர் விசாரணைக் குழு அறிக்கையை அப்போதைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரியிடம் 24 நவம்பர் 2021 அன்று ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் நகல், இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத மற்றும் அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2022ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி, சமூக மற்றும் அமைதி நிலையம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தற்போதைய நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எம்.எம். அலிப்பினால் ஒரு வருடம் கழித்து வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பத்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி முழந்தாளிட வைத்தமை, இருவரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலை செய்ய முயற்சித்தமை, இனங்களுக்கிடையில் வெறுப்பு மற்றும் பகைமை உணர்வுகளை ஊக்குவித்தமை மற்றும் அதிகாரங்களை மீறியமை ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள், தண்டனை சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சரோஜனி குசலா வீரவர்தன தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.

மதியரசன் சுலக்சன் மற்றும் பூபாலசிங்கம் சூரியபாலன் ஆகிய இரு தமிழ் அரசியல் கைதிகளின் கொலை முயற்சி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட ஏனைய அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பிலான ‘பி’ அறிக்கையை அநுராதபுரம் நீதவானிடம் சமர்ப்பித்து பொலிஸ் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்குமாறு இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்த இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் சவால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரத்வத்த இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றார்.

இரண்டு அரசாங்கங்களின் பாதுகாப்பு

கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளை வகித்த/வகிக்கும் அலி சப்ரியோ, முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களமோ சிறைச்சாலைக்குள் நுழைந்து தண்டனைக்குரிய குற்றத்தை இழைத்த இரண்டு அராசாங்கங்களினதும் உறுப்பினருக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.

2021 டிசம்பரில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அமைச்சரவையின் அனுமதியின்றி இதனை பகிரங்கப்படுத்த முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

டிசம்பர் 5, 2001, நாடாளுமன்றத் தேர்தலின் போது, கண்டி – உடத்தலவின்ன பத்து முஸ்லிம் இளைஞர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரத்வத்த, பிஜியின் ரக்பி பயிற்சியாளரான ஜோயல் ப்ர்ராவை சுட்சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதோடு, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் மூத்த புதல்வரும் ஆவார். இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய உறவினரும் ஆவார்.

420 கோடி அரச நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட என்ட்ரஸ்ட் செக்யூரிட்டி தனியார் நிதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான சானுக ரத்வத்த, இவரது இளைய சகோதரர் ஆவார்.

Facebook Comments