தமிழ் இளைஞர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் கொலையே என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள யாழ். நீதவான் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வழங்கும் வகையில், குற்றப்பத்திரியை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (2) யாழ். நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அலெக்ஸ் நாகராசாவின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமைால் ஏற்பட்ட காயங்களாலேயே மரணம் இடம்பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ். நீதிமன்ற ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, இளைஞனின் மரணம் ஒரு கொலை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய நீதவான், இது தொடர்பான இறுதித் தீர்ப்பிற்காக குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது நிகழ்ந்த, சித்தங்கேணி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவரின் மரணம் “இயற்கை மரணம் அல்ல, கொலையே” என யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
டிசெம்பர் 08 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது, இளைஞனைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை முதல் சாட்சி அடையாளம் கண்டிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாரும் விசாரணைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாகராசா அலெக்ஸ் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை அனுப்புமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த யாழ். மாவட்டம் சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்பவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.