இலங்கையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் எவ்வாறு போராட்டங்களை வன்முறையில் அடக்கி மனித உரிமைகளை மீறுகின்றனர் என்பதை முன்னணி சர்வதேச மனித உரிமை அமைப்பு ஒன்று தனது அண்மைய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை ‘எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்குத் தயார்’ – இலங்கையின் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு – என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 மார்ச் 2022 முதல் ஜூன் 2023-ற்கு இடையில் நாட்டில் இடம்பெற்ற 30 போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தமது பலத்தை பயன்படுத்திய விதம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுப்பாய்விற்கு அமைய, பாதுகாப்புப் படைகள் பொதுவாக கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை மற்றும் தடியடி தாக்குதல்களைப் தவறாகப் பயன்படுத்துவதற்கான பொதுவான வடிவத்தை காட்டுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள 30 போராட்டங்களில் குறைந்தது 17 போராட்டங்களில் பாதுகாப்புப் படைகளின் நடத்தை சர்வதேச சட்டங்கள் மற்றும் பலத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தரங்களுக்கு இணங்கவில்லை என்பதை இந்த அறிக்கை காணொளி ஆதாரத்துடன் காட்டுகிறது.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 2017ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்படும் அமைதிப் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பது குறித்து கவனம் செலுத்தும் இந்த அறிக்கை, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும், தேடுதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
“திடீரென்று தண்ணீர் தாக்குதலை நடத்த ஆரம்பித்தார்கள். போராட்டக்காரர்களை குறிவைத்து தண்ணீரை வெளியேற்றும் ஜெட்கள் வெவ்வேறு திசைகளில் திருப்பி விடப்பட்டன. திடீரென்று தண்ணீர் ஜெட் என் முகத்தை நோக்கி திரும்பியது. ஒரு பயங்கரமான தண்ணீர் என் கண்ணைத் தாக்கியது. என் கண்கள் வீங்கி, சிறிது நேரம் எதையும் பார்க்க முடியவில்லை,” என 15 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்து பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட தனது கணவனுக்கு உண்மை மற்றும் நீதிக்காக போராடி வரும் போராட்டக்காரர் ஒருவர் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நடத்திய போராட்டம் மீதான தாக்குதலின் அனுபவங்களை இவ்வாறு விபரிக்கிறார்.
வடக்கில் ஆயுதப் போராட்டம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அந்த மாகாணம் பாரியளவில் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக வெளிப்படுத்தும் அந்த அறிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 60,000 படையினர் எஞ்சியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு இரண்டு குடிமக்களுக்கும் ஒரு சிப்பாய் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இது உலகின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவம் தொடர்ச்சியாக ஆக்கிரமித்துள்ளமையினால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தெற்கில் நடந்த போராட்டங்களின்போது பாதுகாப்புப் படைகளின் தலையீட்டையும் சர்வதேச மன்னிப்புச் சபை கவனத்தில் கொண்டுள்ளது.
“தண்ணீர் வீச்சு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பின்னர், நாங்கள் கலைந்து சென்றோம். அப்படி நாங்கள் கலைந்து சென்றபோதும் எங்களை துரத்திச் சென்று தாக்கினர். அவர்கள் என் முதுகில் தடியால் அடித்தனர்,” என தொழில் ரீதியாக ஊடகவியலாளரும், போராட்டக்காரருமான ஒருவர் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் கூறியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தரத்தை மீறி, போராட்டக்காரர்களுக்குப் பின்னால் இருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய பொலிஸார், கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், பாடசாலைகளுக்கு அருகிலும், தெளிவாக வெளியேற
முடியாத பகுதிகளிலும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை தொடர்ந்து வீசியதோடு, இதனால் சிறுவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களும் இரசாயனங்களின் விளைவுகளுக்கு ஆளானார்கள் என அறிக்கை வெளிப்படுத்துகிறது.
“ஆரம்பத்தில் இருந்தே, 2022-23 போராட்டங்களை இலங்கை பொலிஸ், இது விரோதமானவை மற்றும் வன்முறையானவை, அவற்றை அடக்குவதற்கு பலம் பயன்படுத்தப்படும் என்ற அனுமானத்துடனேயே அணுகியது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதையும், போராட்டங்களை எளிதாக்குவதும் பாதுகாப்பதும் அதிகாரிகளின் கடமை என்பதையும் பொலிஸ் அங்கீகரிக்கத் தவறிவிட்டது. மாறாக, அவர்கள் பெரும்பாலும் அமைதியான போராட்டக்காரர்களை குறிவைத்து, துரத்தி, தாக்கியுள்ளனர்,” என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஸ்ம்ருதி சிங் தெரிவிக்கின்றார்.
போராட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தைப் பயன்படுத்துவது பொதுவாகப் பொருத்தமற்றது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, எனினும் நாட்டின் தெற்கில் பல போராட்டங்கள் அடக்க இராணுவ வீரர்களைப் பயன்படுத்தப்பட்டதை காணமுடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகிய அனைத்திற்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம் இருந்தாலும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திணைக்களங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் இத்தகைய பரந்த மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், போராட்டங்களை ஒடுக்குவதற்கு சட்டவிரோதமாக பலத்தை பயன்படுத்தியதற்காக ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது இராணுவ உறுப்பினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதை இந்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.
சித்திரவதை அல்லது பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை பற்றிய அனைத்து நம்பகமான குற்றச்சாட்டுகளும் பாராபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணைக்குப் பின்னர், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் சிரேஷ்டத்துவத்தைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்படுவதை (மரண தண்டனையின்றி) உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பாதுகாக்க இலங்கை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் அதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு, அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து இருதரப்பு, பலதரப்பு மற்றும் பிராந்திய வாய்ப்புகளையும் பயன்படுத்த, இலங்கையுடன் இருதரப்பு ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ள அரசாங்கங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.