”ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரை விற்று” காணி அபகரிப்பு குற்றச்சாட்டு

0
Ivory Agency Sri Lanka

ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ, கொள்ளுப்பிட்டியில் உள்ள காணிகளை பலவந்தமாக அபகரிப்பதற்கு குண்டர் கும்பலை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒன்பது பிள்ளைகளின் தந்தையான துவான் அசன் சலீம், குண்டர்களுக்கு காவல்துறைக்கு உதவுவதாக குற்றம் சாட்டுகிறார்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி துவான் சலீம் மற்றும் அவரது குடும்பத்தினர் நவம்பர் 15 திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினர்.

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோவின் குண்டர்கள் குழுவொன்று தன்னையும் அவரது பிள்ளைகளையும் தாக்கியதாகவும், கொள்ளுப்பிட்டியில் அவர் தங்கியிருந்த கொள்கலன் வீட்டையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

நில அபகரிப்புக்கு மூளையாக செயற்பட்டவர் மொஹமட் சித்திக் மொஹமட் ஷேக் என துவான் அசன் சலீம் குற்றம் சாட்டியுள்ளார்.

”மொஹமட் சித்தீக் மொஹமட் ஷேக் என்பவர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இருந்து பாணந்துறை வரையான வீதி ஓரத்தில் உள்ள வீடுகள், காணிகளை அபகரிப்பதோடு, குண்டர்களை வைத்து செயற்படுவதோடு, ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரை குறிப்பிட்டு தம்மை தாக்குகின்றாார்.”

இதன் பின்னணியில் கொள்ளுப்பிட்டி சிறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் இருப்பதாக துவான் அசன் சலீம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலிஸாருக்கு பாதாள உலக பிரமுகர் உத்தரவு பிறப்பிப்பதாகவுமை் துவான் அசன் சலீம் கூறியுள்ளார்.

தானும் தன்னுடைய ஒன்பது பிள்ளைகளும் கொள்ளுப்பிட்டி, காலி வீதி, 10ஆவது லேனில் அமைந்துள்ள கொள்கலன் வீட்டில் வசித்து வருகின்ற நிலையில், அந்த இடம் வேறொருவருக்கு சொந்தமானது எனக் கூறி துப்பாக்கிகளை காட்டி அச்சுறுத்தி, தன்னையும, தமது பிள்ளைகளையும் தாக்கிய ஒரு குழு, குறித்த கொள்கலன் வீட்டை அவர்களுக்கு எராஜ் பெர்னாண்டோவுக்குசொந்தமான பாதுகாப்பு நிறுவனத்திற்கு கொண்டு சென்றதாக, கடந்த 11ஆம் திகதி துவான் அசன் சலீம் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் இதற்கு முன்னர் பல தடவைகள் மக்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் பம்பலப்பிட்டி, கொத்தலாவல அவென்யூ பகுதியிலுள்ள காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து இரண்டு பாதுகாவலர்களை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தின் ஆய்வுச் சுற்றுப்பயணத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை நோக்கி பொம்மை துப்பாக்கியை எறிந்து அச்சுறுத்திய குற்றத்திற்காக அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தனது சொந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பல ஊழியர்கள் காணியை பாதுகாக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாக்குதல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Facebook Comments