அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் வருத்தமடைந்துள்ளன

0
Ivory Agency Sri Lanka

அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக தெரிவித்துக்கொண்டு நிறுவனங்களின் நிதி விபரங்களை மேற்பார்வையிடுவதற்கான சட்ட வரைபினை ராஜபக்ச அரசாங்கம் உருவாக்குவதால், அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஏற்கனவே நிறுவப்பட்ட செயலகத்தின் கீழ் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை உருவாக்குவதோடு மாத்திரமல்லாமல், அந்த அமைப்புகள் ஊடாக இலங்கைக்கு பெறப்படும் அனைத்து நிதி மற்றும் உதவிகளையும் கண்காணிக்க, மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் குறித்த செயலகத்தை இணைப்பதன் மூலம் ஒரு பிரிவை உருவாக்குவது குறித்து அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள தேசிய சமாதானப் பேரவை, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான முக்கியமான திட்டத்தின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என வலியுறுத்தியுள்ளது.

”அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தாமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வழிவகுக்கவில்லை. தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி பணப் பரிவர்த்தனைகளை விசாரணை செய்யத் தவறியமை மற்றும் அரசுக்கு வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களை கருத்திற்கொள்ளாமையே காரணம்” என தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலான எந்த விசாரணையும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள தேசிய சமாதானப் பேரவை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குறித்து முடிவற்ற விவாதம் தொடர்கையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் பழிவாங்கலை நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் அமைதி கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக செயற்படும் தேசிய சமாதானப் பேரவை உள்ளிட்ட முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்
ஓகஸ்ட் 8ஆம் திகதி, ஜனாதிபதியையும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு, சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, ராஜபக்ச அரசாங்கத்தின் நெருங்கிய கூட்டாளியான கலுபஹனே பியரதன தேரர், அருட்தந்தை ஆசிரி பெரேரா, முஸ்லிம் கவுன்சிலின் ஹில்மி அஹமட், செயற்பாடுகளின் போது காணாமல் போன இராணுவ வீரர்களின் உறவினர்களின் அமைப்பை நடத்தும் விசாக தர்மதாச, பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பில் அரச சார்பற்ற அமைப்பை நடத்தும் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், சஞ்சீவ விமலகுணரத்ன, பேராசிரியர் டி. ஜெயசிங்கம், பேராசிரியர் டியூடர் சில்வா, ஜோ வில்லியம்ஸ் மற்றும் தயானி பனகொட ஆகியோர் குறித்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

“பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நீடித்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர தேவையான நிறுவன சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ச வெளியிட்ட ட்விட்டர் பதிவை புகழ்ந்துள்ள அவர்கள், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

”தடையின்றி கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்து சிவில் சமூகப் பிரதிநிதிகளின் அனைத்துக் கருத்துக்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி, நல்லிணக்க செயல்முறையை முன்னெடுப்பதற்கு சிவில் சமூகத்திற்கு அரசாங்கம் உதவ முடியும் என்று கூறினார். சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் தனது அரசாங்கம் உறுதியாக உள்ளது” என ஜனாதிபதி தெரிவித்ததாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பது மற்றும் அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்ட பல கருத்துக்களை ஜனாதிபதி தெரிவித்ததாக அரச சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்காணிப்பு செயலகத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அல்லாமல் வேறு சிவில் விவகார அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதன்போது கோரப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் உள்ள அரசாங்கத்திற்கு கொரோனாவை கட்டுப்படுத்த உதவுமாறு, அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்காணிப்பு செயலகத்தின் தலைவர் ராஜா, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து கோரிக்கை விடுத்தார்.

எனினும், தற்போதைய செயற்பாடுகளை கைவிட்டு அந்த நிதியை கொரோனாவை கட்டுப்படுத்த வழங்க வேண்டுமென்ற இந்த கோரிக்கையை, சில அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் நிராகரித்தனர்.

எவ்வாறாயினும், கொழும்பை தளமாகக் கொண்ட முக்கிய அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தை ஆதரித்து உதவியதோடு, கொரோன கட்டுப்பாட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வோதய அமைப்பின் தலைவரான வின்யா ஆரியரத்ன மற்றும் பப்ரல் அமைப்பின் தலைவரான ரோஹன ஹெட்டியாராச்சி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், மாவட்ட மட்ட பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டதோடு, அவர்களில் பெரும்பாலானோர் தேசிய சமாதானப் பேரவையின் உறுப்பினர்களாக காணப்பட்டனர்.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம், மனித உரிமைகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துவதில் ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிப்பதற்காக, மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் அமைச்சர் பேராசரியர் ஜகத் பாலசூரியவை அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு ஒன்றை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Facebook Comments