பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களை விடுதலை செய்ய வேண்டும் என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மாநாட்டில் ஸ்ரீலங்காவின் இழிவான மனித உரிமைப் பதிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு குழுவை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பெப்ரவரி 2ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் தமது சிறைவாசத்தின் போது தமது வாழ்க்கைக் கதைகளை கூறியதை நினைவு கூர்ந்த ஞானசார தேரர், அவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பல தடவைகள் தற்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“விடுதலைப் புலி சந்தேகநபர்களை விடுதலை செய்ய வேண்டும் என தற்போதைய ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம். இப்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த காயத்தை மீள கீறுவதில் பயனில்லை.”
மேற்கு மற்றும் ஐரோப்பாவில் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் நாட்டிற்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வதற்கு சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டமையும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி என்ற வகையில் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த தாம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் தாய்மாரை சந்தித்ததாக கலகொடஅத்தே ஞானசார தேரர் நினைவு கூர்ந்தார்.
தேசிய சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி சந்தேகநபர்களில் சிலர் விடுதலை செய்யப்படுவார்கள் என ஞானசார தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவா மாநாட்டில் இலங்கையின் இழிவான மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு குழுவை விடுவிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதுத் தொடர்பிலான உண்மைகளை ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளேன். பயங்கரவாத தடைச் சட்டம் செயற்பாட்டிற்கு வந்த பின்னர், கைதிகளுக்கு பிணை வழங்கப்படுவது அல்லது விடுவிக்கப்படுவது இதுவே முதல் முறை” என நீதி அமைச்சர் சப்ரி கூறியிருந்தார்.
பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
இந்த சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாதச் சட்டத்தின் திருத்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பேரை பிணையில் விடுவிக்க ஏறாவூர் பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டார். கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.