வேலைநிறுத்தங்களை தடை செய்வதற்கான சட்டங்களை இயற்ற ஜனாதிபதி ஒப்புக்கொள்கிறாரா?

0
Ivory Agency Sri Lanka

வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தில் தடை செய்ய வேண்டும் என நீதியமைச்சர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டுமென கோரியுள்ளன.

தனியார் வானொலி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 27ஆம் திகதி கலந்து கொண்ட நீதி அமைச்சர் அலி சப்ரி வேலைநிறுத்தங்களை தடை செய்வது தொடர்பான சட்டங்களும் ஒழுங்குகளும் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

”தற்போதைய அரசாங்கத்தில் ஐந்து வருடங்களுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அலி சப்ரி, தற்போதைய அரசாங்கத்தில் நீதி அமைச்சர் என்ற ரீதியில் அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட வேண்டிய அரசாங்கத்தின் இறைமையைப் பாதுகாப்பது அவரது பொறுப்பு என்பதை நினைவுபடுத்துகின்றோம். ” என 21 தொழிற்சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் ஒரு ஒரு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்த உரிமை என்பது உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த ஒரு வரலாற்று ரீதியிலான உலகளாவிய வெற்றியாகும். இன்று உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள், ஜனநாயக உரிமைகள் அனைத்தும் இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையின் மீது கிடைத்த வெற்றிகள் என இணை அழைப்பாளர்களான சில்வெஸ்டர் ஜெயக்கொடி மற்றும் ரஞ்சன் சேனாநாயக்க ஆகியோர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 1948 இன் 87ஆவது சாசனம் மற்றும் 1949 இன் 98ஆவது சாசனம் ஆகியன, உலக உழைக்கும் மக்களின் ஒன்றுகூடும் உரிமை மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகளாக உறுதிப்படுத்தியுள்ளன.

1978 இலங்கை அரசியலமைப்பின் III அத்தியாயத்தின் 14-1ஆவது பிரிவு, எந்தவொரு குடிமகனுக்கும் ஒரு தொழிற்சங்கத்தை ஒழுங்கமைப்பதற்கும் சேருவதற்கும் சுதந்திரத்தை முழுமையாக உறுதிப்படுத்துகிறது.
பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், 1935ஆம் ஆண்டின் தொழிற்சங்க கட்டளைச் சட்டம் தொழிற்சங்கங்களை அமைத்து செயற்படுத்துவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

அமைச்சர் சப்ரியின் இந்த ‘திமிர்த்தனமான அறிக்கை’ அவர் அதிகாரத்தின் மூலம் தன்னிச்சையாகவும் கண்மூடித்தனமாகவும் செயல்படுவதையே காட்டுகிறது. ஜனநாயகத்தின் பெயரால் அதை அகற்ற வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர்கள் கோருகின்றனர்.

இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோருவதோடு, மக்களின் இறையாண்மையை துஷ்பிரயோகம் செய்ய முற்படும் இத்தகைய அமைச்சர்கள் உள்ளிட்ட பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முற்போக்கு சக்திகள் ஒன்றுபட வேண்டுமென பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் கேட்டுக்கொள்கிறது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம், தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம், அகில இலங்கை தொலைத்தொடர்பு தொழிற்சங்கம், ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு, வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம், ஊடக தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஐக்கிய பொது பணியாளர்கள் சங்கம், சுயேட்சை தொழிலாளர் சங்கம், ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு, காப்பீட்டு தொழிலாளர் சங்கம், உணவு மற்றும் புகையிலை தொழிலாளர்கள் சங்கம், அரசு அச்சுப்பொறியாளர்கள் சங்கம், பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிலையம், ஊடகவியலாளர்கள் சங்கம், பெண் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், நிலம் மற்றும் விவசாயச் சீர்திருத்த இயக்கம் மற்றும் பாதுகாப்புச் சங்கம் உள்ளிட்ட 21 சங்கங்களை பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Facebook Comments