வர்த்தக வலயத்தில் உரிமைகளை குறைக்கும் செயற்பாடு தொடர்கிறது

0
Ivory Agency Sri Lanka

இலாபம் ஈட்டும் தொழிற்சாலைகளின் தொற்றுநோய்களின் போது குறைக்கப்பட்ட உரிமைகளை பொருளாதார நெருக்கடியிலும் இழப்பதற்கு எதிராக சுதந்திர தொழிற்சங்கங்கள் களமிறங்கியுள்ளன.

“கொவிட் நெருக்கடியின் போது, குறிப்பாக தனியார் துறை ஊழியர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டன. அடிப்படையில் அத்தியாவசிய சேவையாக அவர்களிடமிருந்து உழைப்பு பெறப்பட்டது. ஆனால் பாதி ஊதியமே கொடுக்கப்பட்டது. மேலதிக நேர கொடுப்பனவுகள், வருகை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. ஊழியர்களில் பாதி பேர் மாத்திரமே வேலைக்கு அழைக்கப்பட்டனர். பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்போது பொருளாதார நெருக்கடியிலும் அதேதான் நடக்கிறது,” என்கிறார் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் (FTZGSEU) இணைச் செயலாளர் லலித் கருணாதிலக.

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலாபம் தேடும் முதலாளிகள் தொழிலாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க இணங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தொழிலாளர் உரிமைகளை இல்லாமல் செய்வதை நிறுத்தி, கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் இழந்த கொடுப்பனவுகளை வழங்குமாறு உலகப் புகழ்பெற்ற “அடிடாஸ்” போன்ற நாமங்களை கொள்வனவு செய்வோர் மற்றும் உள்ளூர் முதலாளிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.”

பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் மேலதிக நேரம், போக்குவரத்து வசதிகள், ஊக்கத்தொகைகள், ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை குறைத்து அடிப்படை சம்பளத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக FTZGSEUஇன் இணைச் செயலாளர் குறிப்பிடுகிறார்.

“பொருளாதார நெருக்கடியை அடுத்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கொள்வனவாளர்களும் முதலாளிகளும் இலாபம் அடைந்தனர்.”

தொழிற்சங்கங்களால் வென்றெடுக்கப்பட்ட 10,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை சில நிறுவனங்கள் குறைக்கும் சூழ்நிலையில் “மேன் பவர்” தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வலய தொழிற்சங்க இணைச் செயலாளர் கருணாதிலக சுட்டிக்காட்டுகிறார்.

“நெருக்கடி காணப்படுவதாக தெரிவித்து, தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து இழப்பீடு வழங்காமல் பணிநீக்கம் செய்து, கொடுப்பனவுகளை நீக்கி, எங்கள் ஊதியத்தை குறைத்து, முதலாளிகளுக்கு சலுகை கொடுத்து, தொழிலாளர்களுக்கு வரி விதிக்கின்றார்கள். ” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தக வலய ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

Facebook Comments